புத்தகக் கண்காட்சிக்காக உள்ளூர் படைப்பாளிகளிடமிருந்து மாநகர சபையினால் புத்தகங்கள் கோரப்படுகின்றன.

உள்ளூர் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் இடம்பெறவுள்ள புத்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்ட படைப்பாளிகளிடமிருந்து மாநகர சபையினால் அவர்களின் புத்தகங்கள் கோரப்படுகின்றன.

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு உள்ளூர் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட படைப்பாளிகளின் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் 2019 ஒக்டோபர்  25 மற்றும் 26 ஆந் திகதிகளில் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.  

மாநகர சபையின் நூலக மற்றும் மக்கள் மேம்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இரு நாள் கண்காட்சியில்  தமது புத்தகங்களை காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் விரும்பும் மட்டக்களப்பு மாவட்ட படைப்பாளிகள் எதிர்வரும் 2019 ஒக்டோபர்  20 ஆந் திகதிக்கு முன்னதாக 065 2222484 மற்றும்  077 4934113 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் இட ஒதுக்கீட்டினை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2019 ஒக்டோபர் மாதம் 01 ஆந் திகதி தொடக்கம் 31 ஆந் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டக்களப்பு மாநகர சபையின் கீழ் இயங்கிவரும் மட்டக்களப்பு, கல்லடி அரசடி மற்றும் புதூர் பொது நூலகங்களினால் வினாவிடைப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் சித்திரப் போட்டி ஆகிய போட்டி நிகழ்ச்சிகளும் சிறுவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மேலும் பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வருட தேசிய வாசிப்பு மாதம் வாசிக்கும் சமூகத்தினை உருவாக்க, சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம் என்ற தொனிப்பொருளில் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.