ஊடகவியலாளர்களுக்கு காணிகள் அளவிடும் பணிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான காணிகள் வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமாரிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆணையாளர் நே.விமல்ராஜின் முயற்சியினால் இந்த காணிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் ஊடகவியலாளர்களுக்கு எந்தவித உதவிகளும் கிடைக்காத நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வீட்டுத்திட்டம் ஒன்றை ஊடகவியலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது.

எனினும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்;டுள்ள நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட காணிகளை அளவீடுசெய்து ஊடகவியலாளர்களுக்கு வழங்கு நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழு மேற்கொண்டுவருகின்றது.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மைலம்பாவெளியில் இந்த காணிகளை அளவீடு செய்து வழங்கும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆணையாளர் நே.விமல்ராஜ் கலந்துகொண்டு குறித்த காணிகளை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

ஜனாதிபதி தேர்தல்கள் அறிவிப்பதற்கு முன்பாக இதற்கான காணி நடமாடும் சேவைகள் நடாத்தப்பட்டு காணிகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.