விசேட தேவையுடைய பிள்ளைகள் தொடர்பில் பெற்றோரின் வகிபாகம்.



சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம். அந்த வகையில் குடும்ப மொன்றின் ஆக்கபூர்வமான ,முறையான இயக்கம் சமூகத்தின்  சீரிய போக்கிற்கு அடிப்படையாக அமைகின்றது .

குடும்பமொன்றின் பெற்றோர் ,பிள்ளைகள் என்ற உறவு நிலைகள் உன்னதமானது ,  இந்த உறவு நிலைகளுக்குள் பலவிதமான சிக்கல்கள் நேரிடுகின்றன , அவற்றில் உறவு சிக்கல்கள் அதிகமாக ஏற்பட ஏதுவாக அமைவது விசேட தேவையுடைய பிள்ளைகள் வளர்ப்பும் பராமரிப்பும்.

 இப் பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோரின் காத்திரமான அறிவும் வழிகாட்டலும் சமூகத்தின் சீரிய இயக்கத்துக்கு முக்கிய பங்காற்றுகின்றன.

குடும்பம் ஒன்றின் அதியுர்ந்த சொத்தான
பிள்ளைகள் வளர வளர உறவின் பரிணாமங்கள் சிக்கலடைந்து கொண்டே போகும் நிலையும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது.

 எது எவ்வாறாயினும் சிக்கல்கல்கள் நீங்கி நல்லுறவு மலர பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.

பிள்ளைகள் வளர்ந்து பாடசாலை கல்விக்கற்றலுக்கு மாணவர்கள் என்ற அந்தஸ்துடன் தள்ளிவிடும் போது பெற்றோர் தமக்கான பெரும் சுமை குறைந்ததாக எண்ணிவிடக்கூடாது.

அந்தவகையில் மாணவர்களது சமுகமயமாக்கல் பணிக்கு முதலாவதாகக் குடும்பங்களே செல்வாக்கு செழுத்துகின்றது.

குடும்ப அமைப்பானது தாய், தந்தை, குழந்தைகள் போன்ற பல்வேறு அமைப்பைக் கொண்டிருப்பது போன்று பல்வேறு உறவு நிலைகளையும் சமூக உறுப்பினர்களது சமூகமயமாக்கலில் பல்வேறு உதவிகளைச் செய்கின்றன.

மாணவனது அல்லது குழந்தையினது கற்றலுக்கான முதலாவது சூழலாக உள்ளது குடும்பம் என்றே கூறலாம். அத்தோடு குழந்தைகள் தமது எண்ணங்களை வெளிப்படுத்தும் முதலாவது தளமாகவுள்ளது.

 இதனால் ஒரு மாணவனது உளவியல் ஆளுமை, நடத்தை முறைகளில் குடும்பச் சூழல் பெரும் தாக்கம் செழுத்தும் ஒன்றாகவுள்ளது.

ஒரு பிள்ளை குடும்பத்துடன் கொண்டிருக்கும் தொடர்பானது பிள்ளையினுடைய நற்பண்புடன் செல்வாக்குச் செழுத்துகிறது.
அச்செல்வாக்கு அவனுடைய ஆயுட்காலம் வரை நீடித்திருக்கும்.

குடும்பத்தின் பருமன் அதிகரிக்கும் போது அதன் உறுப்பினர்களிடம் நிலவும் தொடர்புகளும் வேறுபடுகின்றன.

வீட்டில் கல்விச்சூழல் நன்கு அமையும் போது பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் உண்டு என முஸ்கெரேவ் தனது நூலில் 1966இல் எடுத்துக்காட்டியுள்ளார்.


இந்தவகையில் விசேட தேவை கொண்ட பிள்ளைகள் குடும்பத்தினுடனான தொடர்பு என்ற வகையில் பார்க்கின்ற போது இப்பிள்ளைகள் குடும்பத்திலேயே அதிகளவு வசிக்கும் தன்மை காணப்படுகின்றது.

இதன் காரணமாக இவர்களின் அனைத்து செயற்பாடுகளும் குடும்பத்தை பாதிப்பதாக காணப்படுகிறது. விசேட தேவை கொண்ட பிள்ளைகளை கவனித்துக் கொள்வது என்பது பெற்றோருக்கு கட்டாய பொறுப்பு எனும் போது ஒரு குறிப்பிட்ட வயதுவரை பிள்ளைகளை பெற்றோர் அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்து வளர்ப்பர்.

இருப்பினும் இப் பிள்ளைகளை மிக பாதுகாப்பாக பார்த்துக்கொள்கின்றனர்.
குறிப்பிட்ட வயதை அடைந்த பெண்பிள்ளைகளும் எவ்வித பாதுகாப்பும் இன்றி சொல்லாமல் வெளியில் செல்வதும் அவர்களை பெற்றோர் எங்காவது போய் தேடி கண்டுபிடித்து கூட்டி வருகின்றார்கள்.

இவ்வாறான சூழலில் விசேட தேவையுடைய பிள்ளைகளை கவனித்துக்கொள்வது கடினமாகும். இது பிள்ளைக்கு கூடவே ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்கின்றது, இது எப்போதும் சாத்தியப்படாததாகும்.

பிள்ளையின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இவர்களை அக்கறையுடன் பார்த்துக் கொள்ளமுடியும் பெற்றோர் இல்லாத சந்தர்ப்பத்தில் இப்பிள்ளைகளின் நிலை கேள்விக்குறியதாக மாறுகின்றது.


விசேட தேவையுடைய பிள்ளைகள் ஒரு சில சந்தர்ப்பங்களில் குடும்பத்தில் முரட்டுத்தனமாக நடந்துக்கொள்கின்றனர்.

இவ்வாறு நடந்துக்கொள்ளும்போது ஏனைய குடும்ப உறுப்பினர்களை தாக்கமுற்படுகின்றனர்.

இதனால் இப்பிள்ளைகளை பெற்றோர்கள் முறையாக கையாள தெரிந்திரிருத்தல் அவசியமாகும்.


பொருளாதார ரீதியாக குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்கு இவ்வகைப்பிள்ளைகளினால்  மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளவும் மாதாந்தம் பிள்ளையை சிகிச்சைக்காக அழைத்து செல்லவும் நடக்க கஸ்டப்படக்கூடிய பிள்ளைகளை பாடசாலைக்கு முச்சக்கர வண்டியில் அனுப்பவும் என ஒவ்வொரு வகையிலும் பிள்ளைக்கான தனியான செலவீனம் அதிகமாகவே உள்ளது.

இவ்வாறு குடும்ப பொருளாதாரம் குறைவாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இப்பிள்ளைகளுக்கான செலவீனத்தை சமாளிக்க முடியாது உள்ளதால் பெற்றோர்களுக்கு இப்பிள்ளைகள் தொடர்பில் வெறுப்புணர்ச்சியும் பராமரிப்பது தொடர்பில் பாரிய சவால்களையும் எதிர்கொள்கின்றனர்.

விசேட மாணவர்களின் கற்றல் செயற்பாடு ஆரம்பிப்பதற்கு முன்னர் பெற்றோர் பிள்ளையுடனேயே இருக்கின்றனர். இதன் காரணமாக அன்றாட வீட்டு வேலைகளை கூட செய்துகொள்ள முடியாமல் இருக்கின்றனர்.

ஒரு பயணம் செல்வதாக இருந்தாலும் பிள்ளையை கூட்டி செல்வதில் சிக்கலை அனுபவிக்கின்றனர். நம்பி பிள்ளையை யாரிடமும் ஒப்படைத்து செல்லவும் பயப்படுகின்றனர். காரணம் பிள்ளையின் நடத்தையில் கொண்டுள்ள அச்சம், பாதுகாப்பு இல்லை என்ற நிலைப்பாடுமாகும்.

இவ்வாறு விசேட தேவையுடைய பிள்ளைகளை கொண்டிருக்கும் குடும்பத்தினரும் பல்வேறு சிக்கல்களை அனுபவிக்கின்றமையை சாதாரணமாக நாம் அவதானிக்கலாம்.

 இப் பிள்ளைகளின் பெற்றோர் அறியாமை கொண்டவர்களாக காணப்படுகின்றமையால் பிள்ளையை ஒழுங்காக தமது கட்டுபாட்டில் வைத்துக்கொள்ள முடியாமல் இருக்கின்றனர்.


இவ் விசேட தேவையுடைய பிள்ளை குறித்த வயது மட்டத்தை அடைந்தும் அதற்கேற்ற மூளை வளர்ச்சி இன்மையினால் உடல் பெரியவர்களை போல காட்சியளித்தாலும் செய்கை அனைத்தும் சிறு பிள்ளைக்கு ஏற்றதாக காணப்படுகிறது.

பாடசாலை கல்விக்குப்பின் பெற்றோர்கள் இவர்களை எப்போதும் ஒருவர் வழிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையெனில் எங்கு, எப்படி, நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறந்து அவர்கள் நினைத்ததை எல்லாம் செய்துக்கொண்டிருப்பார்கள்.

இச்செயற்பாடுகள் பிற்காலத்தில் அவர்களது வாழ்க்கை நடைமுறைக்கு பெரும் பாதகமாகவும் அமையலாம்.

இதனால் கட்டாயம் பெற்றோரின் துணையுடனே பிள்ளையின் ஒவ்வொரு செயற்பாடும் இடம்பெறுவது முக்கியமாகும்.


இன்று அநேக இடங்களில் விசேட தேவையுடைய பிள்ளைகளின் தேவைகள் மற்றும் அவர்களின் திறமைகள் வெளிக்கொணர்ந்து முன்னேற்றம் கண்டுவரும் அதே வேளை அதே அளவானவர்கள் இன்னும் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

விழிப்புணர்வற்ற பெற்றோர்கள் வெட்கம் என்னும் சொற்பதத்தித்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பிள்ளைகளை சுயமாக இயங்கவிடாது ஏனைய குடும்ப உறுப்பினர்களின் உதவியை பெரிதும் நாடிநிற்க வேண்டிய நிலையே உருவாகியுள்ளது .

 கள்வன் வந்து கவர்ந்து சென்று விடுவான் என ஒழித்து வைக்க அவர்கள் ஒன்றும் பொன்னும் பொருளும் அல்ல. உள்ளமும் உணர்வுகளும் கொண்ட கள்ளமற்ற மனிதர்கள்.

அவர்களுக்கும் ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கும் கிடைக்கும் உணவு, உடை, உறையுள் சிறப்பாக அமைய வேண்டும்.

ஆதரவான அன்பான வார்த்தைகள் பேச அரவணைக்க உறவினர்கள் நண்பர்களிடம் அவர்களை அறிமுகப்படுத்த பெற்றோர் தயாராக இருக்க வேண்டும்.

அந்தவகையில பெற்றோர்கள் தம் பிள்ளையை இவர் எனது பிள்ளை நன்றாக பாடுவார், பேசுவார், கதைப்பார், ஆடுவார், இசை பிடிக்கும், நடனம் பிடிக்கும் என கூறுவதில் விரல்விட்டு எண்ணக்கூடிய பெற்றோர்களே உள்ளனர்.

எனவே எமது பிள்ளைகளுக்கு நாம் அளிக்கும் கௌரவமானது அவர்களை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதில் தங்கியுள்ளது, எமது பிள்ளைகளுக்கான கௌரவமானது முதலில் வீட்டுச் சூழலே ஆகும்.


குடும்பங்கள் எனும் போது முதன்மையானதும் மிக முக்கியமானதும் எனக் கருதுவது சுற்றுச்சூழல். இது விசேட தேவைகளுடைய மாணவர்கள் தங்களது வாழ்க்கையை சீர்படுத்தும் திறனை ஏற்படுத்தும் ஒன்றாக கருதப்படுகின்றது.

அதே போல் பாடசாலை சமூகமும் மாணவர்களை மிக முக்கியமாக வழிகாட்டும் ஓர் இடமாக கருதப்படுகின்றது.

அந்தவகையில் விசேட தேவையுடைய பிள்ளைகளை பாடசாலை சமூகத்துடன் இணைத்து கொள்வது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமையாகும்.

அவ்வகையில் சமூகத்தில் மனிதன் சிறந்தவனாக வாழ்வதற்கும் தன்னை முழு மனிதனாக மாற்றிக் கொள்வதற்கும் போட்டிமிக்க இன்றைய சமூகத்தில் தன்னை வெளிப்படுத்தி நிற்கின்ற இன்றைய காலகட்டத்தில் கல்வியறிவு அவற்றிற்கு அவசியமாகும்.

மாணவர்களில் வினைத்திறன் கூடிய மாணவர்கள், வினைத்திறன் குறைந்த மாணவர்கள் மெல்ல கற்கும் மாணவர்கள், விசேட தேவையுடைய மாணவர்கள் என்றெல்லாம் பலவாறு கூறிக்கொண்டு சென்றாலும் மாணவர்கள் அனைவரும் சமமானவர்களே.

ஆகவே ஒவ்வொரு பெற்றோர்களும் அதனை புரிந்து கொண்டு விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்க முன்வரவேண்டும்.


ஆனால் இன்று பெற்றோர்கள் சாதாரண மாணவர்களுடன் இணைந்த கற்கைச்செயற்பாட்டில் தம் விசேட தேவையுடைய பிள்ளைகளை இணைத்துக் கொள்வது தொடர்பில் எதிர் மறையான மனப்பாங்கை கொண்டுள்ளார்கள்.

அவைகளாக சாதாரண மாணவர்களுடன் இணைந்த வகுப்பறை செயற்பாடு பொருத்தமானதாக அமையவில்லை, வகுப்பறை அமைப்பு கற்பித்தல் முறைகள் கற்பித்தலில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் வேறுபாடுடையதாகக் காணப்படுகின்றமை, விசேட தேவைகளுடைய மாணவர்களுக்கான கலைத்திட்டம் கல்வி சார்ந்ததாகவே காணப்பட்டது மாறாக அடிப்படை வாழ்க்கை திறன்கள் என்பவற்றை கொண்டதாக அமையவில்லை இவ்வாறு சாதாரண மாணவர்களுடன் இணைந்த வகுப்பறை செயற்பாட்டில் விசேட தேவைகளுடைய மாணவர்கள் சமூகரீதியாக புறக்கணிக்கப்படும் நிலை தோன்றுகின்றது என பெற்றோர் நம்புகின்றனர்.

(ச.பா.ஷர்பின் கிழக்கு பல்கலைக்கழக 2019 இறுதி வருட மட்டக்களப்பு மையப்படுத்திய மாற்றுத்திறனாளிகளின் கலைச்செயற்பாடுகள் தொடர்பான ஆய்வின் ஊடாக வெளிக்கொணர்ந்த விடயம்)

ஆனால் சில பெற்றோர்கள் விசேட தேவைகளுடைய தங்களது பிள்ளைகள் சாதாரண மாணவர்களுடன் இணைந்து வகுப்பறைச் செயற்பாடுகளில் ஈடுபடுவதனை விரும்புகின்றனர்.

ஆனால் சிலர் அதனை விரும்பாமல் தனிப்பட்ட வகுப்பறை செயற்பாட்டினையே முன்வைக்கின்றனர்.


சாதாரண மாணவர்களுடன் இணைந்த வகுப்பறை செயற்பாட்டில் விசேட தேவையுடைய மாணவர்கள் ஈடுபடும் போது பெற்றோர்கள் கீழ் வரும் விடயங்களில் அதிகம் கவனம் செழுத்துதல் வேண்டும், பாடசாலைக்கு வந்து மாணவர்களை அவதானித்தல் அவசியம்.
விருத்தி பெற்ற தொடர்பாடல் திறன்களை கொண்டு பாடசாலை செயற்படுத்தல் வேண்டும், அடிக்கடி  ஆசிரியர் மீது கொண்டுள்ள நம்பிக்கையினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பாடசாலை சென்று அடிக்கடி பார்த்தல், கூட்டங்களில் பங்கேற்றல், பாடம் நடைபெறும் போது அதனை அவதானித்தல்,
பாடசாலைக்கு தங்களது பிள்ளை விசேட தேவைகளினை உடையது என்பதனை அறிவித்தல் வேண்டும்.

பாடசாலை அதிபருடன் பிள்ளையின் செயற்பாடு தொடர்பில் விசாரித்தல்
தொடர்பாடல் நுட்பங்களினை விருத்தி செய்தல்
ஆசிரியர்களுக்குத் தேவையான வளங்களினைப் பெற்றுக் கொடுப்பதற்கு முயலுதல்
தேவையான தகவல்கள் ஆதாரங்களினை வழங்குதல்.

பாடசாலை செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்களை கூறுதல்.
கலைச்செயற்பாடுகளில் ஈடுபடுத்த அனுமதியளித்தல்.
விசேட தேவைகளுடைய மாணவர்களுக்கு பாடசாலையில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கு கொள்வதற்கான ஆர்வத்தினை ஏற்படுத்தல்.


இவ்வாறு செயற்பாடுகளில் ஒவ்வொரு விசேட தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோரும் கவனம் எடுக்கின்ற வேளையில் அவர்களின் ஒவ்வொருவரின் மனதிலும் பாடசாலை செல்வதன் மூலம் பிள்ளை சுதந்திரமாக இயங்கும் நிலையை அடைய முடியும், பிறருடன் ஒன்றாக ஒற்றுமையாக செயலாற்றுவது எப்படி சமூகத்தில் நடந்து கொள்ள வேண்டும், பிறருடன் வேலை செய்வது எப்படி என்பன பாடசாலை செல்வதன் மூலம் பிள்ளைக்குப் போதிக்கப்படுகின்றது,  பாடசாலை செல்வதால் பிள்ளை சட்டத்தை மதிக்கக் கற்றுக்கொள்கிறது, பிள்ளை நண்பர்களுடன் பழகவும் அவர்கள் சமூகத்திற்கு உரியவர்கள் என்ற உணர்வை தரவும் உதவுகிறது, பிள்ளை பொறுப்புக்களை ஏற்கப் பயிற்றுவிக்கப்படுகின்றது, அத்துடன் குடும்பத்திலும் மற்றும் சமூகத்திலும் அவர்கள் செய்யவேண்டிய கடமைகளைத் தவறாது நிறைவேற்றுதல் போன்ற பல்வேறு நல்ல எண்ணங்களைக் கொண்ட கருத்துக்கள் ஒவ்வொரு பெற்றோர்களின் மனதில் தம் விசேட பிள்ளைகள் தொடர்பில் தோன்றும்.


ஆகவே ஒவ்வொரு மனிதர்களும் நேசிப்பதற்கும் நேசிக்கப்படுவதற்குமே மனித இதயம் விரும்புகிறார்கள்,  அதில் நம்மில் பலர் நேசிப்பதை விட நேசிக்கப்படுவதையே ஏற்றுக் கொள்கிறோம், விரும்புகிறோம் நாம் விசேட தேவைக்குட்ப்பட்டவர்களை நேசிப்பவர்களாக அவர்கள் சுயமாக எழுந்து நின்று கௌரவமாக வாழ்வதற்கு ஒவ்வொரு பெற்றோர்களும் செயற்பட முன்வர வேண்டும்.

ஆக்கம்.



சலீம் பாத்திமா ஷர்பின்
கிழக்கு பல்கலைக்கழகம்
இலங்கை .



செய்தியாக்கம்.
சசி துறையூர்