இந்த நாட்டில் மதவாதம்,அடிப்படைவாதம் தோற்கடிக்கப்படவேண்டும் -மட்டக்களப்பில் அனுர

இந்த நாட்டில் இனவாதம் தோற்கடிக்கப்படவேண்டும்.அடிப்படைவாதம் தோற்கடிக்கப்படவேண்டும்.மதவாதம் தோற்கடிக்கப்படவேண்டும்.நாங்கள் அனைவரும் ஒன்றாக வாழும் நாட்டினை ஏற்படுத்தவேண்டும்.இவ்வாறான மாற்றங்களே இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தினை ஏற்படுத்திக்கொடுக்கும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு சின்ன ஊறணி சந்தியில் மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,கோப் குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்து நெத்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அனுர,

இந்த நாட்டின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.அதனால் நாம் புதிய ஆட்சியொன்றை ஏற்படுத்தவேண்டும்.ஐக்கிய தேசிய கட்சி இந்த நாட்டில் 37ஆண்டுகள் ஆட்சிசெய்தது.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இந்த நாட்டினை 34ஆண்டுகள் ஆட்சிசெய்தது.மீண்டும் இந்த கட்சிகள் வந்தன.மீண்டும் ஆட்சியதிகாரத்தினை கோரி நின்றன.

71வருடங்கள் நாட்டினை ஆட்சிசெய்து கட்டியெழுப்ப முடியாதவர்கள் மீண்டும் கட்டியெழுப்புவார்கள் என நம்புகின்றீர்களா.ஒருபோதும் அவர்களினால் இந்த நாட்டினை கட்டியெழுப்பமுடியாது.

இந்த நாட்டினை கட்டியெழுப்ப,இந்த நாட்டினை மாற்ற இந்த நாட்டில் புதிய ஆட்சியொன்று தேவைப்படுகின்றது.அதற்காக எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி புதிய ஆட்சியை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு மக்களிடம் உள்ளது.நாங்கள் இந்த நாட்டினை கட்டியெழுப்புவோம்.

நூட்டில் பொதுவான சட்டம் ஒன்று தேவையாகவுள்ளது.இந்த நாட்டில் உள்ள சட்டம் நியாயமான சட்டமாக இல்லை.பணம் உள்ளவர்களுக்கு அதிகாரமுள்ளவர்களுக்கு ஒரு சட்டமும் ஏழைய எளிய மக்களுக்கு ஒரு சட்டமும் காணப்படுகின்றது.அனைவருக்கும் சமனாக கிடைக்ககூடிய சாதார சட்டம் கிடைக்கவேண்டும்.

இங்கு சக்திவாய்ந்த பொலிஸ் இருக்கின்றது.இந்த நாட்டில் எந்தவொரு குற்றச்செயல்களையும் மோசடிகளையும் தடுத்து நிறுவத்துவதற்கான முழுமையாக அதிகாரங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கப்படும்.அவ்வாறு இருக்கும்போது குற்றங்களையும் மோசடிகளையும் தடுக்கமுடியும்.

இந்த நாட்டில் மோசடிகளும் குற்றங்களை செய்யும் அரசியல்வாதிகளும் சட்டத்தினாலும் நீதித்துறையினராலும் பாதுகாக்கப்படுகின்றது.இந்த நிலைமைகள் மாற்றப்படவேண்டும்.இந்த நாட்டினை கட்டியெழுப்பவேண்டுமானால் பொதுவான சட்டம் இருக்கவேண்டும்.

அடுத்ததாக இந்த நாட்டினை கட்டியெழுப்பவேண்டுமானால் இந்த நாட்டில் ஊழல்,மோசடிகள்,வீண்விரயங்கள் தடுக்கப்படவேண்டும்.கள்வர்கள் எந்த நாட்டினையும் கட்டியெழுப்பமுடியாது.உலகில் எந்த நாடும் கள்வர்களினால் கட்டியெழுப்பப்படவில்லை.கொள்ளையர்களின் ஆட்சியினால் இந்த நாட்டினை கட்டியெழுப்பமுடியாது.இந்த கொள்ளையர்களிடம் இருந்து நாட்டினை மீட்கவேண்டும்.மக்களின் சொத்துகளின் கோடிக்கணக்கான சொத்துகளை இந்த அரசியல்வாதிகள் சேர்த்துவைத்துள்ளனர்.

நாட்னை கொள்ளையடித்து இந்த நாட்டினை வறுமை நிலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.நாடு இன்று கடன் பொறிக்குள் சிக்கியுள்ளது.நாடு பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ளபோதிலும் இந்த நாட்டின் அரசியல்வாதிகள் எந்த கஸ்டங்களையும் எதிர்நோக்கவில்லை.நாடு கடன்பட்டுள்ளது,நாட்டின் ஆட்சியாளர்கள் கடன்படவில்லை.நாட்டினை ஏழ்மை நிலைக்குள் தள்ளி ஆட்சியை நடாத்தியவர்கள் கோடிஸ்வரராகியுள்ளனர்.

அதன் காரணமாக ஊழல் மோசடிகளை ஒழித்து புதிய அரசை உருவாக்கவேண்டும்.அவ்வாறான அரசு ஒன்றை ஏற்படுத்துவோம் என்ற உறுதிமொழியை நாங்கள் வழங்குகின்றோம்.

இதேபோன்று இந்த நாட்டினை கட்டியெழுப்பவேண்டுமானால் தேசிய ஒற்றுமையேற்படவேண்டும்.இந்த நாட்டில் சிங்கள,தமிழ்.முஸ்லிம் என பல்வேறு இனங்கள் வாழ்கின்றன.சிங்கள,தமிழ் மொழி இரண்டு மொழிகள் உள்ளன.அரசாங்க நடைமுறை மொழிகளாக இவையிரண்டும் இருக்கவேண்டும்.இரண்டு மொழிகளிலும் மக்கள் தமது அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் உரிமை ஏற்படுத்தப்படவேண்டும்.தமிழ் மொழியில் கடிதம் எழுதினால் தமிழ் மொழியிலேயே பதில் வழங்கப்படவேண்டும்.மொழியில் சமவுரிமை வழங்கப்படவேண்டும்.

இந்த நாட்டில் பிரதான மதங்கள் நான்கு உள்ளன. பௌத்தம், இந்து, இஸ்லாம்,கிறிஸ்தவம் என நான்கு மதங்கள் உள்ளன.மதம் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.இதில் ஒருமதம் தாழ்வானது இன்னுமொரு மதம் உயர்வானது என கூறமுடியாது.இந்த நாட்டினை முன்னோக்கிசென்று கட்டியெழுப்பவேண்டுமானால் மதங்களுக்கான சமவுரிமையினை பெற்றுக்கொடுக்கவேண்டும்.அதுமட்டுமன்று ஒவ்வொறுவரும் தாங்கள் பின்பற்றும் கலாசாரவுரிமையினைப்பெற்றுக்கொடுக்கவேண்டும்.இந்த நாட்டில் பல கலாசாரங்கள் இருக்கின்றன.ஒவ்வொரு இன மக்களுக்கும் ஒவ்வொரு கலாசாரம் இருக்கின்றது.அவ்வாறு உள்ளதன் காரணமாகவே இந்த நாடு ஒரு அழகான நாடகயிருக்கின்றது.நாடு முன்னோக்கி செல்லவேண்டும்.அனைத்து கலாசாரங்களையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நாடு ஒன்று எமக்கு தேவையானது.

ஓவ்வொரு தைப்பொங்களுக்கும் உங்கள் வீடுகளுக்கு வந்து பொங்கல் சாப்பிடவேண்டும்.சிங்களவரின் வீடுகளுக்கு சென்று பால் பொங்கல் சாப்பிடவேண்டும்,றம்சான் நேரத்தில் முஸ்லிமின் வீட்டுக்கு சென்று கஞ்சிகுடிக்கவேண்டும்.இது அவர்களின் கலாசாரம்.இந்த நாட்டினை முன்னோக்கி செல்லவேண்டுமானால் இந்த கலாசாரத்தினை ஏற்றுக்கொண்டு அதற்கு மதிப்பளிக்கவேண்டும்.அதனை நாங்கள் இந்த நாட்டில் ஏற்றுக்கொள்வொம்.அதற்கு மதிப்பளிப்போம்.

இந்த நாட்டில் ஒரு தமிழ் பெண்ணின் நெற்றியில் இருக்கும் பொட்டை அழிக்க கூறியோ,முஸ்லிம் பெண்ணின் பர்தாவினை கழற்றக்கூறியோ சிங்கள பெண்ணின் சாறியை மாற்றச்சொல்லியோ இந்த நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்தமுடியாது.அவ்வாறான கலாசாரத்திற்கு இடமளித்து கொண்டுசெல்வதன் மூலமே இந்த நாட்டினை முன்னேற்றமுடியும்.

எமது சந்ததி 30வருடகால யுத்ததினை புரிந்தது.இந்த நாடு இரத்ததினால் நனைந்தது.தாய்தந்தையரின் கண்கள் கண்ணீரால் நிரம்பியது.பாரியவேதனைகளை இந்த யுத்தம் ஏற்படுத்தியது.இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் தேவையா?.முரண்பாடுகள் தேவையா?எமது பரம்பரை யுத்தம் புரிந்தது அந்த யுத்ததினால் வடக்கிலும் தெற்கிலும் உயிரிழந்தது சாதாரண குடும்பத்தின் பிள்ளைகளே.ஆனால் அந்த யுத்ததில் வடக்கிலும் தெற்கிலும் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளும் யுத்ததில் இறக்கவில்லை.பாராளுமன்றத்தில் இருந்து சிங்கள,தமிழ்,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளும் யுத்ததில் இறக்கவில்லை.

வடக்கிலும் தெற்கிலும் இருந்தது சாதாரண குடும்பங்களின் பிள்ளைகளே யுத்ததின்போது போராடினார்கள்.இந்த நாட்டில் யுத்தத்தினை உருவாக்கியவர்கள் அரசியல்வாதிகளாகும்.இந்த நாட்டில் இனவாதத்தினை ஏற்படுத்தியவர்கள் அரசியல்வாதிகள்.ஆனால் இந்த நாட்டில் யுத்தம் புரிந்தவர்கள் சாதாரண பொதுக்களாகும்.

இந்த நாட்டில் இனவாதம் தோற்கடிக்கப்படவேண்டும்.அடிப்படைவாதம் தோற்கடிக்கப்படவேண்டும்.மதவாதம் தோற்கடிக்கப்படவேண்டும்.நாங்கள் அனைவரும் ஒன்றாக வாழும் நாட்டினை ஏற்படுத்தவேண்டும்.இவ்வாறான மாற்றங்களே இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தினை ஏற்படுத்திக்கொடுக்கும்.இவ்வாறான ஒரு நிலமையினை கடந்த 71 ஆண்டுகள் ஆட்சிசெய்த அரசியல் கட்சிகளினால் செய்யமுடியாமல்போனது.ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் மாறிமாறி ஆட்சி செய்ததுடன் இணைந்தும் ஆட்சி செய்தும் இந்த நாட்டினை கட்டியெழுப்பமுடியாமல்போனது.

நாங்கள் புதிய ஆட்சியை ஏற்படுத்தினால் இந்த நாட்டினை மீட்டெடுத்து முன்கொண்டுசெல்லுவோம்.அதற்காக அனைவரும் ஒன்றுசேருமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.