அமிர்தகழியில் ‘ஜீவனாளி’ ஆடைத்தொழிற்சாலை திறந்துவைப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களை தலைமைதாங்கும் பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் ஆடைத்தொழிற்சாலையொன்று திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு அமிர்தகழி பாடசாலை வீதியில் பாம் பவுண்டேசனின் அனுசரணையுடன் இலங்கையில் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனமான எல்.ஐ.சி.சி.நிறுவனத்தினால் இந்த ஆடைத்தொழிற்சாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஜீவனாளி என்னும் பெயருடன் திறக்கப்பட்டுள்ள இந்த ஆடைத்தொழிற்சாலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களை தலைமைதாங்கும் பெண்களைக்கொண்டு உற்பத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் நிகழ்வு பாம் பவுண்டேசன் நிறுவன பணிப்பாளர் சுனில் தொம்பேபொல தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி எஸ்.சத்தியகௌரி, எல்.ஐ.சி.சி.நிறுவனத்தின் தலைமை நிறுவாக அதிகாரி ப.யசோதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.