மட்டக்களப்பு சிவானந்தா மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிசார் மீது விசாரணை! நாடாளுமன்றில் வியாழேந்திரன்


மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்கள் மீது பொலிசார் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி, பொலிசார் மீது நடவடிக்கையெடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன்.


நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கும், திருகோணமலை கோணேஸ்வரா பாடசாலைக்குமிடையில் நடந்த நட்புறவு கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி, காத்தான்குடி பொலிசார் பாடசாலை மைதானத்திற்குள் நுழைந்து பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மீது அடாவடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த காட்டுமிராண்டி தாக்குதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலை மைதானத்திற்குள் நுழைந்து மாணவர்களை தாக்க இவர்களிற்கு அதிகாரத்தை வழங்கியது யார்? அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களை கைது செய்திருக்கலாம். அல்லது பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைத்திருக்கலாம்.

8ம் மாதம் 27ம் திகதி சம்பவத்திற்கு தீர்வு காணப்பட்டிருந்தால், இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது. இதற்கும் தீர்வு காணப்படாவிட்டால், இன்று பாடசாலை மைதானத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள் நாளை பாடசாலை வகுப்புக்குள்ளும் புகுந்து தாக்குதல் நடத்தலாம்.

இவ்வாறான தாக்குதல்கள் எதிர்காலத்தில் இடம்பெற கூடாது. இடம்பெற்ற இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது உடனடியாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்' என்றார்.