அம்பிளாந்துறையில் இராம நாடகம் அரங்கேற்ற விழா

இராம நாடம் அரங்கேற்ற விழா மட்டக்களப்பின் அம்பிளாந்துறைக் கிராமத்தில் சமுதாய ஈடுபாடு, பங்களிப்புடன் 'அடிப்புற அரங்க செயற்பாட்டு அமைப்பின்' தொடக்க செயற்பாட்டு முன்னெடுப்பின் வெளிப்பாடாக கடந்த ஒரு வருடம் களரியடிக்கப்பட்டு 13.09.2019 அன்று சதங்கையணி விழா நடைபெற்று அதன் அரங்கேற்ற விழா நாகமுனை நரசிங்கர் வைரவர் ஆலய வெளியில் இன்று மாலை சமுதாய அழகியல் இணைவுடன் நடந்தேறியது.

கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் தலைவர் சு.சந்திரகுமார் அவர்கள் 'அடிப்புற அரங்கச் செயற்பாட்டு அமைப்பினை' உருவாக்கி அதன் தலைவராகச் செயற்படுகின்றார்.

அதன் மூலம் சமுதாய கூட்டுச் செயற்பாட்டையும், கூட்டு அழகியலையும், மக்கள் மைய முன்னெடுப்பையும் வலுப்படுத்த வழி முன்மொழியப்பட்டது. இந்நிகழ்வு அவ்வமைப்பின் தலைவரின் தலைமையின் கீழ் நடைபெற்றது.

'இராம நாடகம்' வடமோடிக் கூத்தினை அதன் கதை ஓட்டத்திற்கமைய திறன்பட ஆடி, பாடலை செம்மைப்படுத்தி, தமக்கு அரங்கேற்றுவதற்கான திருப்தி அடைந்ததும் வட்டக்களரி அமைத்து அதற்கான ஆற்றுகை வெளியில் பண்பாட்டு சம்பிரதாயங்களுடன் அரங்கேற்றப்பட்டது.

இக்கூத்து நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களும், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் கா.சித்திரவேல் அவர்களும், மட்டக்களப்பின் முன்னாள் பாராளுமற்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களும், அரங்கச் செயற்பாட்டாளரும் நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளருமான கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களும் தேசிய கல்வி நிறுவகத்தின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி முருகு தயாநிதி அவர்களும் கலந்து சிறப்பித்து கருத்துரை வழங்கினர்.

இவர்கள் இவ்வாறான செயற்பாடு சமகாலத்தில் அவசியமானது என்றும் இது எமது அடையாளத்தைப் பாதுகாப்பது என்றும் பல கருத்தியலில் உரையாற்றினர்.
அம்பிளாந்துறைக் கிராமத்தின் அம்மன் பூசகர்கள், பிதேச சபை உறுப்பினர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், கலைக்கழகத் தலைவர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து சிறப்பித்து உரையாற்றினர்.

இந்நிகழ்வில் இப்பிரதேசத்தின் அண்ணாவிமாருக்கும் இளம் அண்ணாவியாக உருவாகும் இளையோருக்கும் 'அடிப்புற அரங்கச் செயற்பாட்டு அமைப்பினரால்' மாண்பு செய்யப்பட்டது. அவர்களை இவ்விடத்தில் அறிமுகப்படுத்துவதோடு, தமது சூழலில் அவர்களின் ஆளுமையும் அறிவாற்றலும் வெளிப்பட்டு தொடர்ந்து மக்கள் கலையை வலுப்படுத்த இம் மாண்பு செய்தல் வெளிப்பட்டது.

அத்தோடு, எண்ணம்பாலப்பூவலைச் சேர்ந்த கூத்துக் கலைஞர் அ.கந்தசாமி இளம் அண்ணாவியாக ஆக்குவதற்கு இதன் தலைவர் சு.சந்திரகுமாரால் அவரது செலவில் புதிய மத்தளம் ஒன்றும் வழங்கிக் கௌரவித்து கூத்துப் பழக்குவதற்கான தூண்டுதலையும் செய்து வைக்கப்பட்டது.

வடமோடிக் கூத்தின் ஆட்டம், தாளம், அதன் தனித்துவமான பாடல், தருக்கள், விருத்தங்களின் ஓட்டம் மிகவும் தரமாக மண்ணின் வாசனையுடன் கூத்தர்களால் ஆற்றுகை செய்யப்பட்டது. அனைத்துக் கூத்தர்களினதும், அண்ணாவிமாரினதும் சங்கமமாக இக் கூத்துச் செயற்பாட்டுத் தளம் அமைந்திருந்தமை சிறப்பம்சமாகும்.

இக் கூத்தின் அண்ணாவிமாராக ப.கதிர்காமநாதன் அவர்களும், சி.தீபன் அவர்களும் செயற்பட்டனர். இதன் ஏட்டாசியர் க.புவிக்குமார் அவர்களும் ஏனைய சபையோராக சி.சுந்தரலிங்கம், சி.லோறஞ்சி, சி.கோபாலப்பிள்ளை ஆகியோரும் செயற்பட்டனர்.

இக் கூத்தின் முன்னீடு முகாமைத்துவம் சு.சந்திரகுமார் ஆவார். களரி முகாமையாளர்நா.சங்களப்பிள்ளை ஆவார். இது மட்டக்களப்புப் பிரதேசத்தின் அனைத்து ஊர்களிலும் இருந்து வரவழைக்கப்பட்ட கூத்துக் கலைஞர்கள் நட்பு ரீதியாக இணைக்கப்பட்டு அவர்களின் ஒத்துழைப்புடன் வலுப்பெற்றது.

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியோர், பெண்கள், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இக் கூத்தில் கட்டியக்காரனாக கு.துஷ்யந்தனும் (அம்பிளாந்துறை), இராமராக சு.சந்திரகுமாரும் (அம்பிளாந்துறை), சீதையாக அ.கந்தசாமியும் (எண்ணம்பாலப்பூவல்), இலச்சுமணனாக பொ.புட்பேந்திரனும் (மகிழடித்தீவு), பரதனாகவும் இராவண சன்னியாசியாகவும் த.பேரின்பராஜா (அம்பிளாந்துறை), சத்துருக்கனாக சி.கேதீஸ்பரனும் (வாளக்காலை), தசரதனாக வி.சசிகரனும் (மகிழடித்தீவு), கோசலையாக த.முத்துலிங்கமும் (மாமாங்கம்), கைகேசியாக கி.பாஸ்கரனும் (முனைக்காடு), சுமத்திரையாக சீ.அலெக்ஸ்சாண்டரும் (தன்னாமுனை), வசிட்ட முனிவராகவும் விபீசணனாகவும் அழகு தனுவும் (அம்பிளாந்துறை), கூனியாகவும் சூர்ப்பனகையாகவும் வே.சேதுராமனும் (மகிழடித்தீவு), இராவணனாக ப.சசிதரனும் (அம்பிளாந்துறை), கும்பகர்ணனாக து.கௌரீஸ்வரனும் (சீலாமுனை), மண்டோதரியாக கி.பாஸ்கரனும், திருச்சடையாக த.முத்துலிங்கமும் (மகிழடித்தீவு), அனுமாராகவும் பறையறைவோனாகவும் ப.சுரேஸ்குமாரும் (கொக்கட்டிச்சோலை), சுக்கிரீபனாக ப.றசிகரனும் (முனைக்காடு), இந்திரஜித்தாக ம.கேதீஸ்வரன் (முனைக்காடு) ஆடித் தங்களது கூத்தாளுமையை வெளிப்படுத்தினர். இக் கூத்தில் ஆடிய கூத்தர்கள் தமக்கான ஆட்டம், பாட்டு, அதனூடான நடிப்புத் திறன்களைக் களரி வெளியில் செம்மையாகவும் மிகவும் அழகாகவும் வெளிப்படுத்தி தமது பிரதேச தனித்துவத்தை படைப்பாக்கம் செய்திருந்தனர்.