கல்லடி கடற்கரை தூய வேளாங்கண்ணி ஆலய வருடாந்த திருவிழா நிறைவு

கிழக்கு மாகாணத்தின் மிகவும் பழமையான மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் வீற்றிருந்து அற்புதம் பொழியும் தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய வருடாந்த திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (22)காலை கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.

கடந்த வியாழக்கிழமை(19)கொடியேற்றத்துடன் ஆரம்பமான அன்னையின் வருடாந்த திருவிழாவில் தினமும் ஆலயத்தில் திருச்செபமாலையும் பிரார்த்தனையும் அதனைத்தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டுவந்தது.

நேற்று சனிக்கிழமை காலை திருப்பலியும் மாலை அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெற்றதுடன் நற்கருனை ஆராதனையும் ஆசிர்வாதமும் நடைபெற்றது.

இன்று ஞாயிற்றுக்காலை மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருவிழா கூட்டுத்திருப்பலியை தொடர்ந்து ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இந்த கூட்டுத்திருப்பலியில் அருட்தந்தை ஜோசப்மேரி மற்றும் ஆலயத்தின் பங்குத்தந்தை றொசான் ஆகியோர் இணைந்திருந்தனர்.

இதன்போது திருச்சொரூபம் கொடித்தம்பம் பகுதிக்கு அருட்தந்தை ஜோசப்மேரியினால் கொண்டுவரப்பட்டு விசேட வழிபாடுகளை தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெற்றது.

இன்றைய திருவிழாவில் கிறிஸ்தவ,இந்து மக்கள் பெருமளவில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.