மட்டக்களப்பி;ல் கோலாகலமாக ஆரம்பமான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வெகுவிமர்சையாக மட்டக்களப்பில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,இளைஞர் விவகார,புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சும் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

இதனையொட்டி இன்று காலை மட்டக்களப்பு கல்லடி பாலம் மற்றும் தாண்டவன்வெளி காணிக்கை மாதா முன்பாக இருந்து கலாசார பேரணி நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் மற்றும் கிழக்கில் வாழும் சகல இன மக்களின் கலாசாரங்களையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது.

பேரணியானது நிகழ்வு நடைபெறும் தேவநாயகம் மண்டபத்திற்கு வந்ததும் அங்கு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ச.நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள்,கலாசார திணைக்கள அதிகாரிகள்,கலைஞர்கள்,இலக்கியவாதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழ் தாய்க்கு பணிப்பாளரினால் மாலை அணிவிக்கப்பட்டதை  தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

இன்று ஆரம்பமான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா நாளை மாலை வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.