மாற்றுத்திறனாளிகள் சமூக மாற்றத்திற்கு பங்களிப்பு வழங்குவரா?




இன்று ஊனமுற்றோர் அல்லது வலுவுற்றோர் எனும் பதமானது அகராதிகளில் “மாற்றுதிறனாளிகள் என்ற பதத்தினால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளது.

எல்லா நாடுகளைப் பொறுத்தவரையிலும்
உடல், உள, ரீதியான குறைபாடு காரணமாகத் தமது வாழ்வியல் தேவைகளைச் சுயமாக எதிர் கொள்ள முடியாதவர்களே “மாற்றுத்திறனாளிகள்” எனச் சட்ட ரீதியாகக் கருதப்படுகின்றனர்.

ஆதலால் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும் அவர்களின் தேவைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கான உரிமைகளை வழங்க வழியுறுத்தியும் ஐக்கிய நாடுகள் சபை  1992வருடம் , ஆண்டுதோறும் டிசம்பர் 3ஆம் திகதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக பிரகடணப்படுத்தி  உள்ளது.





அரசியல், சமூக, கலாசாரம, பொருளாதாரத்தில் மற்றவர்களைப் போல மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக மக்கள்தொகையில் 10 சதவீதமானோர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இதில் 80 சதவீதமானோர் வறிய நாடுகளில் உள்ளனர்.

 இவர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாகவும் உள்ளனர். வளரும் நாடுகளில் உள்ள மாற்றுத்திறனாளியாக உள்ள குழந்தைகளில் 90 சதவீதமானோர் பள்ளிக்குச் செல்வதில்லை என யுனஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.



இன்று எமது இலங்கை நாட்டை பொறுத்தவரையில் மாற்றுத்திறனாளிகள் பயனற்றவர்களாகவும் சமூகத்தில் சுமைகளாகவும் எப்போதும் மற்றவர்களின் தயவில் வாழவேண்டிய பரிதாபத்துக்குரியவர்களாகவும் நோக்கப்பட்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் இவர்களது கல்வி தொடர்பாகவோ, வாழ்க்கை தொடர்பாகவோ எதுவும் சிந்திக்கப்படவில்லை.

மனித நாகரிகத்தின் வளர்ச்சி காரணமாக இவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஓரிடத்தில் அல்லது ஒரு நிறுவனத்தில் வைத்து உணவு, உடை, உறையுள், பாதுகாப்பு போன்றவற்றை வழங்கி பராமரிக்க வேண்டும் என்ற சிந்தனை தோன்றியது.

இவ்விதமாக பராமரிக்கப்பட்டு வந்தவர்களுக்கு காலப்போக்கில் சில அடிப்படை விடயங்களைக் கற்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது கிடைத்த வெற்றிகளின் பயனாகவே உடலூனமுற்றவர்களுக்கு கல்வி ஒரு சிந்தனைப்போக்கு எண்ணம் தோற்றம் பெறலாயிற்று.



இவ்வடிப்படையிலேயே இவர்களுக்கான விடுதிப் பாடசாலைகள் தோற்றம் பெற்றன.

மாற்றுத்திறனாளி என்பவர் யார்? என்ற வினாவுக்கு நம் மனக்கண்ணில் உதிப்பது உடல் ஊனமுற்றவர்களும், பார்வையற்றவர்களும் மற்றும் செவிப்புலன் வலுவற்றவர்கள் என்றும் இவர்களுக்கு எதுவும் இயலாது என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களிடமும் ஆற்றல் திறன் என்பன உள்ளது என்பது தொடர்பாக சமூகத்திற்கு தெளிவில்லாது அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்குகின்ற தன்மையினை எம்மத்தியில் அதிகளவில் காணலாம்.


ஆரம்பத்தில் இவர்களைத் ஊனமுற்றவர்கள் அங்கவீனமானவர்கள் என்றும் வலது குறைந்தவர் என்றும் அழைக்கப்பட்டார்கள். இப் பதங்கள் இவர்களின் குறைகளை சுட்டிக்காட்டி சமூகத்திலிருந்து இவர்களை புறந்தள்ளுவதற்கு ஒரு காரணமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காகவும் விசேட தேவையுடையோர் என்றும் அழைக்கப்பட்டனர்.

இதுவும் தவறுதலான புரிதலுக்கு வழிவகுத்ததன் விளைவாகவே மாற்றுத்திறனாளி (Disable) என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.



இன்று இப்பதம் நடைமுறை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் மாற்றுத்திறன் என்ற சொல்லுக்குள் தமிழில் பல பொருள் பொதிந்திருக்கிறது சொல்லின் வெளிப்படுகையில் அவர்களை எம்மிடமிருந்து பிரித்து பார்ப்பதற்கான ஒரு சொல்லாகத்தான் அமைகின்றது எனலாம்.

ஆனால் அவர்களிடம் இருந்து வெளிப்படும் திறன்கள் எம்மிடமிருந்து அவர்களை பிரித்து பார்க்க முடியாத ஒன்றாகவே தான் காணப்படுகின்றது.

இவர்கள் உடலிலோ அல்லது மனதிலோ ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக அவர்களால் சில செயல்களை செய்யமுடியாமல் போய்விடுகின்ற காரணத்தினால் அவர்களை நாம் மாற்றுத்திறனாளி என்று அழைக்கின்றோம்.

ஏதோ ஒரு வகையான மாற்றுத்திறன்கள் மறைந்து காணப்படுவதாலும் இவர்கள மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கின்றோம்.

இவர்களை உடலியல், உளவியல் ரீதியான குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு மாற்றுத்திறனாளிகளை பல வகைப்படுத்தலாம்.

 உடலியல் குறைபாடு, செவிப்புலன் வலுவற்றோர், விழிப்புலன் வலுவற்றோர், உளப்பிளழ்ச்சி, மெதுவான உளவளர்ச்சியுடையவர்கள் இவ்வாறு கூறலாம்.

அதில் மனவளர்ச்சி குறைபாடுள்ள பிள்ளைகளை பார்க்கின்ற போது மூளை முடக்குவாதம், டவுன்  சிண்ட்ரம் ஓட்டிசம், பல்லின குறைபாடு, அதீத செயற்பாடு, மஸ்கியூல டிஸ்ரொவ்லி மைக்றோ  குகெவ்பலி Spina Bificla  அஸ்பகஸ் சின்ரம் என பல வகைப்படுத்தலாம்.


மாற்றுத்திறனாளிகளும் உலகில் மிகப்பெரிய சிறுபான்மையினராவார். இவர்களில் காணப்படுகின்ற வகைகளில் வேறுபட்டுக் காணப்பட்டாலும் இவர்களது பிரச்சினை தொடர்பாக நாம் குரல் கொடுப்பதற்கு ஒரு குச்சியன் கட்டாக இருப்பதே பலம் .

 இருந்தும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் மற்றும் சமூக, உளவியல் பிரச்சினைகளை பொதுவான முறையில் வரையறுக்க முடியாது. ஒரு மனிதன் பிறப்பிலிருந்து இறப்புவரையில் பலகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்ற இப் பரவலாக்க சூழலில் சமூகக்கூறுகள் ஒரு மனிதரின் உளவியல் காரணிகளை தீர்மானிக்கும் மிகப் பெரும் சக்தியாக காணப்படுகின்றது.

அந்தவகையில் புறச்சூழல் குடும்பம், சமூகம்,  கல்விச் சூழல், நண்பர்கள், விளையாட்டு, தொழில், பண்பாடு, சம்பிரதாயம், கடமை மற்றும் பருவநிலை நோக்கம், ஆசைகள், தேவைகள் ஆகியவை மாற்றுத்திறனாளிகளிடம் உளவியல் சார்ந்த விடயங்களை தீர்மானிக்கின்றது எனலாம்.

அவ்வகையில் உளரீதியான சவால்களில் மெல்லக்கற்போர், ஓட்டிசப்பிள்ளைகள், டவுன்சின்ரோம் பிள்ளைகள்,  துருதுருகுழந்தைகள், பல்வகைக்குறைபாடுடையோர், மூளைவாதத்தால் பாதிக்கப்பட்டோர் என மனவளர்ச்சிக்குறைந்த பிள்ளைகளாக கருதப்படும்  அனைவரும் பொதுவான உளவியல் ரீதியான சவால்களையே எதிர் கொள்கின்றனர்.

அந்தவகையில் உளவியல் ரீதியான சவால்களாக பார்க்கின்ற போது பகுத்தறிவு சார் சிந்தனை என்ற வகையில் நோக்கும் போது எந்த சூழ்நிலையில் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்பதை அறிந்து செயற்படுத்துபவனே பகுத்தறிவுவாதியாவான்.

மனவளர்ச்சி குறைந்த பிள்ளைகள் பகுத்தறிவு ரீதியான வினைத்திறனாக சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாகவும் அதே நேரம் எதையும் சிந்தித்து செயற்படுத்தக் கூடிய தன்மையற்றவர்களாகவும் காணப்படுவர்.

இதனால் இம் மனவளர்ச்சி குறைந்த பிள்ளைகள் சூழ்நிலையை உள்வாங்கிக் கொள்ளல் என்பவற்றில் பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர்.

இவர்களுக்கு ஞாபக மறதி அதிகமாக காணப்படுவதால் பகுத்தறிவு சார் செயற்பாடுகளில் ஈடுபட முடியாத நிலை காணப்படுகிறது. அது இவர்களுக்கு நல்லது, கெட்டதை அறிந்து செயற்படுத்த முடியாத நிலையை உண்டாக்குவதால் சமூக ஒழுங்கில் இது ஒரு சீரற்ற தன்மை உருவாக காரணமாக அமைகிறது.


அதே போல் ஆளுமை பிறழ்வும் மனவளர்ச்சிக்குறைந்த பிள்ளைகளுக்கு உளவியல் ரீதியாக  பெரும் சவாலாக உள்ளது எனலாம். சூழ்நிலைகளுக்கு பொருத்தமான வகையில் நடத்தையை வெளிப்படுத்துவதனையே ஆளுமை என்பர்.

ஒருவருக்கு அவரது ஆளுமையை வளர்த்தெடுப்பதில் நினைவாற்றல் முக்கிய பங்கு வகிக்கின்றது. தாம் ஒரு சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொண்டோம் அச் சூழலில் தமக்கு எவ்வாறான பிரதிபளிப்பு கிடைத்தது என்பதை நினைவிலிருத்திக்கொள்ளும் போது தான் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடத்தைகளை வெளிப்படுத்த முடியும்.

இப்பிள்ளைகளிடம் நினைவாற்றல் குறைவாக காணப்படுவதால் ஆளுமையை வளர்த்தெடுப்பது கடினமான காரியமாக அமைகிறது. இப்பிள்ளைகளால் சூழ்நிலைகளுக்கு தக்க வகையில் நடத்தையினை வெளிப்படுத்த முடியாமல் இருப்பதனால் சமூக சூழலோடு பொருந்திப் போக ஒரு நிலை காணப்படுகிறது.

இது இப்பிள்ளைகளின் சமூகமயமாக்கற் செயற்பாடுகளில் பாதிப்பினை உண்டு பண்ணும் விடயமாக காணப்படுகிறது. இதனால் இப்பிள்ளைகளிடத்தே ஆளுமைப்பிறழ்வு ஏற்படுகிறது.


இப்பிள்ளைகளிடையே ஆளுமைப்பிறழ்வு காணப்படுவதால் அது இப்பிள்ளைகளின் சுயத்தை கட்டியெழுப்புவதில் சிக்கல்களை உண்டு பண்ணுகின்றன. சுயத்தை கட்டியெழுப்புதல் என்பது மற்றவர்களின் பார்வையில் தமது நிலை எவ்வாறு காணப்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு நம்மை நாம் வளர்த்துக் கொள்ளலைக்குறிக்கும்.

சுயத்தை கட்டியெழுப்புதல் செயற்பாடானது ஏனையோருடன் இடையூடாட்டத்தை மேற்கொள்வதில் செல்வாக்கு செழுத்தும் அம்சமாக காணப்படுகிறது. இவ்வாறு தம்மைத்தாம் வளர்த்துக் கொள்வதிலும் தம்முடைய நிலையை உயர்த்திக் கொள்வதிலும் மனவளர்ச்சிக் குறைபாடுடைய பிள்ளைகள் பிரட்சினைகளை எதிர் கொள்கின்றனர்.

இதனால் இப்பிள்ளைகளால் ஏனையோருடன் இடையூடாட்டத்தை மேற்கொள்ள முடியாத ஒரு நிலை தோன்றி இது இப்பிள்ளைகளின் சமூகமயமாக்கற் செயற்பாடுகளையும் பாதிப்பதாக அமையும்.


மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்குகின்ற உள மற்றும் சமூக ரீதியில் எதிர் நோக்குகின்ற சவால்களை தீர்த்துக் கொள்வது காலத்தின் கட்டாய தேவையாக காணப்படுகின்றது. சமூக சூழலில் மாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலமான மாற்றுத்திறனிற்குட்பட்ட நபர்கள் தன்னிச்சையாக தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்ய கூடியவர்களாகவும் மற்றவர்களில் தங்கி நிற்கின்ற நிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தவதன் மூலமாக வாழ்வில் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும்.


ஆக்கம்


சலீம் பாத்திமா ஷர்பின்
நுண்கலைத்துறை இறுதி வருட மாணவி
கிழக்கு பல்கலைக்கழகம்