கல்லடி பாலம் முற்றுகை –நான்கு பேர் வைத்தியசாலையில் -ஒரு நேரடி ரிப்போர்ட்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தினை மறித்து போராட்டம் நடாத்தியவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மற்றும் தடியடிப்பிரயோகம் செய்யப்பட்டு போராட்டம் கலைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு அன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது தாக்குதல் நடாத்திய காத்தான்குடியை சேர்ந்த முகமட் ஆஸாதின் உடல் பாகங்களை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் நேற்று மாலை புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து இன்று மாலை கள்ளியங்காடு பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் குறித்த உடற்பாகங்கள் மட்டக்களப்பு மாநகரசபையின் அனுமதியின்றி கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவி;க்கப்படுகின்றது.

ஜுன் மாதம் 11ஆம் திகதி புதூர் பகுதியில் குறித்த உடற்பாகங்களை புதைக்க நடவடிக்கையெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்களினால் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பினை தொடர்ந்து குறித்த நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அத்துடன் குறித்த உடற்பாகங்களை மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குள் புதைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணமாக குறித்த உடலங்களை இப்பகுதியில் புதைக்கமுடியாது என மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளரினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை கள்ளியங்காடு கிராம சேவையாளர்,பொதுச்சுகாதார பரிசோதகரின் பிரசன்னதுடனும் பொலிஸ் பாதுகாப்புடனும் குறித்த உடற் பாகங்கள் கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் மக்களை இலக்குவைத்து தாக்குதல் நடாத்தி எங்களது உறவுகளைக்கொன்று குவித்த ஒரு கொலைகாரனுக்கு எங்களது பகுதிக்குள் புதைக்க அனுமதிக்கமுடியாது என தெரிவித்த போராட்டக்காரர்கள் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொண்டவர்களின் செயற்பாடுகளை கடுமையாக கண்டித்தனர்.

இதன்போது கள்ளியங்காடு பிரதான வீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தாத காரணத்தினால் மட்டக்களப்பு திருமலை வீதியை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு –திருமலை வீதியினை முறறுகையிட்டு போராட்டம் நடாத்தப்பட்ட நிலையில் அங்கிருந்து ஊர்வலமாக கல்லடி பாலம் வரையில் சென்று அங்கு கல்லடி பாலத்தினை மறித்து போராட்டம் நடாத்தப்பட்டது.

இதன் காரணமாக மட்டக்களப்பு ஊடாக அம்பாறை மற்றும் திருகோணமலை,கொழும்பு நோக்கிய நீண்ட தூர பயணங்களும் குறுந்தூர பயணங்களும் தடைப்பட்டதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்பட்டன.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுடன் பொலிஸார் பேச்சுவார்த்தைகளை நடாத்திய நிலையில் போக்குவரத்திற்கு தடையேற்படுத்தவேண்டாம் என்ற கோரிக்கைகளை பொலிஸார் முன்வைத்தபோதிலும் உடன்பாடுகள் எட்டப்படாத நிலையில் கல்லடி பாலம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பொலிஸாரினால் கண்ணீர்ப்பிரையோகம் மற்றும் தடியடி தாக்குதல் நடாத்தப்பட்டு ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்டது.

இந்த தாக்குதல்கள் காரணமாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியுமான செல்வி மனோகர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் கள்ளியங்காடு இந்து மயானத்தில் வேறு மதத்தினை சேர்ந்த ஒருவரின் உடற்பாகங்களை புதைத்து தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் குறித்த உடற்பாகங்களை அங்கிருந்து அகற்றும் வரைக்கும் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்கப்பபோவதாக தெரிவித்துள்ளனர்.