மண்முனை மேற்கு பிரதேசசபையின் அமர்வு –சிறிநேசன் எம்.பி.தொடர்பிலும் விமர்சனம்

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசசபையின் உறுப்பினர்களுக்கும் சபையின் நடவடிக்கைகளுக்கும அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்வில் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பில் இன்று மண்முனை மேற்கு பிரதேசசபையில் காரசாரமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசசபையின் 17வது அமர்வு இன்று காலை மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.சண்முகராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சம்பிரதாய முறைப்படி சபை அமர்வுகள் ஆரம்பமான நிலையில் சபை நடவடிக்கைக்கு ஆரம்பத்திலேயே சுயேட்சைக்குழு உறுப்பினர் எஸ்.குகநாதன், தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் த.கிருஸ்ணகுமார் ஆகியோரினால் தமக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசனால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் காரசாரமான கருத்துகளை முன்வைத்தனர்.

சூரிய மின்சக்தி நிலையம் அமைப்பதற்கு வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு இடங்களில் காணிகளை வழங்குவது தொடர்பான தீர்மானத்தினை சுயேட்சைக்குழு உறுப்பினர் எஸ்.குகநாதன், தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் த.கிருஸ்ணகுமார் ஆகியோர் கொண்டுவந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றியதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததாகவும் ஆனால் அவ்வாறான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிபந்தனைகளுடனேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் அதற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒரு சில கட்சிக்காரர்களின் பெயரைக்கூறி பிரதேசசபையின் நடவடிக்கைக்கு எதிராக கருத்துகளை தெரிவித்ததாக இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

எனினும் பிரதேசசபையின் அனைவரது ஆதரவுடனேயே குறித்த திட்டம் தொடர்பான பிரேரணை நிபந்தனைகளை நிறைவேற்றினால் ஆதரவு வழங்கப்புடும் என நிறைவேற்றியதாக தவிசாளர் இங்கு தெரிவித்தார்.அதனைத்தொடர்ந்து சபையின் அமர்வுகள் தவிசாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கடந்த கால கூட்டறிக்கை,கணக்கறிக்கைகள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டது.இன்றைய அமர்வின்போது மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசசபையின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன் பல்வேறு பிரேரணைகளும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.