"நிராயுதம் "மாதம் இரு இதழ்கள் எனும் வகையில் வழமையான பத்திரிகை வகையறாக்கள் பாணியிலிருந்து சற்று மாறுபட்டு புதிய வாசகர் வாசிப்புத் தளத்தை நோக்கி ,கிழக்கை மையங்கொண்டு மட்டக்களப்பிலிருந்து வெளிவரத் தொடங்கியுள்ளது.
இவ்விதழில் பந்திகளை விட படங்களே அதிகம் பேசுகின்றன.இளந் தலைமுறையினரை இலக்கு வைத்து பத்திரிகை கவனம் கொள்கிறது."தரமான மக்கள் சமுதாயமொன்றை உருவாக்குவதே அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.அதற்கான ஊடகச் செயற்பாட்டை ஆற்றவே நிராயுதம் எத்தனிக்கும்.பொது மக்கள் நலன்சார் சிந்தனைகளுக்கும் குரலற்ற மனிதர்களின் உரையாடலுக்கும் நிராயுதம் களமாக இருக்கும்." இதுதான் இவ்விதழின் ஆசிரிய தலையங்கமும்,தொடரும் நிராயுதத்தின் நோக்கும் போக்கும் ஆகும்.
"இலங்கை குப்பை மேடல்ல" எரியும் பிரச்சனை,நகர்ப்புற பொதுப் போக்குவரத்தில் புதிய பரிமாணம்"கொழும்பு இலகு தொடருந்து" , தேசிய மக்கள் சக்தியின் "இலங்கைக்கு புதுயுகம்",சர்வ மதத் தலம் கதிர்காமம்,நீரின்றி அமையாது உலகு ஒரு கருத்தாடல்,பாடாத மீன்கள் அமிர்தகழி 1978 என்று மட்டக்களப்பின் குறியீடாய் மாறிப்போன மாமாங்கம் பற்றிய மீட்டல்,சிறிய குச்சிகளின் ஆக்கங்களாய் கூடி விளையாடு பாப்பா,இத்தாலிய ஒரு திரைப்படம் பற்றிய முன்னோட்டம்,இழந்த சோகத்தை வன்மமாக்காமல் புன்னகைப்போம்,பகை மறப்போம்.,எல்லா மதத்தவரின் குறியீடாய் நிமிர்ந்து நிற்கும் சிவனொளி பாதமலை பற்றிய சி.சிவசேகரத்தின் கவிதை வரிகள்,முக்கியமாய் போய் விட்ட முகநூலின் பயன் பற்றிய மாதிரி ஆங்கில மொழிப்பதிவுகளுடன்,சிறகுநுனி ஏற்பாட்டில் நடைபெற்ற பெண் குறுந் திரைப்பட விழா பற்றிய பதிவு என்று பதினாறு பக்கங்களும் படங்களுடன் பல கதைகள் பேசுகின்றது.
இந்த வடிவமும் உத்தியும் புதிய வாசக வாசிப்புத் தளத்தை நோக்கி நகரும் என்று நம்புவோமாக,வாழ்த்துக்கள் சிறகு நுனிக்கும்,நிராயுதம் ஆசிரியர் குழாத்திற்கும்.

