"மட்டக்களப்பின் பாரிய புரட்சிக்கு" சஜித் பிரேமதாசாவே காரணம் - எஸ்.பீ.ஜீ அணியின் தலைவர் ஜெகவண்ணண் தெரிவிப்பு


மட்டக்களப்பு மாவட்டத்திற்கான  சஜித் பிரேமதாச அவர்களின் இணைப்பாளரும் எஸ்.பீ.ஜீ அணியின் மாவட்ட தலைவருமாகிய  ம.ஜெகவண்ணண் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைவாக  இதுவரை  மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டுத்திட்டங்கள் நிர்மானிக்கப்படாத பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கு  வீட்டுத் திட்டங்களை நிர்மானிப்பதற்கு அமைச்சர் சஜித் பிரேமதாச அனுமதியளித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை காலமும் வீடுகள்  நிர்மானித்துக் கொடுக்கப்படாத கிராமங்களில் வீடற்ற வசதி குறைந்த மக்களிற்கு வீடுகள் நிர்மானித்துக் கொடுக்கப்படவுள்ளன. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆணையாளர் நே.விமல்ராஜ் அவர்களினால் 11   வீடமைப்புத் திட்டங்களிற்காக காணிக் கச்சேரிகள் நடாத்தப்பட்டு காணிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு 15 புதிய வீட்டுத்திட்டத்திற்காக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் புதிய வீட்டுத்திட்டத்தினை அமைப்பதற்கும் அண்மையில்  அமைச்சர் அவர்களினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நிர்மானிக்கப்படவுள்ள 650 வீடுகளை உள்ளடக்கிய    மாதிரி வீட்டுத்திட்ட கிராமங்களில் அடங்கும் ஒவ்வொரு வீடும்  தலா 750,000 இலட்சம்  ரூபாய் பெறுமதிமிக்க 26 வீட்டுத்திட்டங்களுக்காக  48 மில்லியன் ஏழு இலட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய் நிதி  ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வீட்டுத்திட்டங்களிற்காக உள்ளக  பாதை, மின்சாரம் மற்றும் நீர் வசதிகள் என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக  எஸ்.பீ.ஜீ அணியின் மாவட்ட தலைவர்  ம.ஜெகவண்ணண் தெரிவித்தார்.


அமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த மாதிரிக் கிராமங்களுக்கான  வேலைத்திட்டங்கள் மிக விரைவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் க.ஜெகநாதன் அவர்களது தலைமையில்   ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஏலவே நிர்மானிக்கப்பட்டுவரும் 188 வீட்டுத்திட்டங்களில் 15 வீட்டுத்திட்டங்களின் நிர்மானப் பணிகள்  நிறைவடைந்து அமைச்சரின் கரங்களினால் பயனாளிகளிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.