எவ்வாறான சவால்கள் வந்தாலும் இனங்களிடையே நல்லுறவு இருக்கவேண்டும் -அலிசாகீர் மௌலானா

பொலிஸ்மா அதிபர்,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைசெய்யப்படும் வெளிப்படையான சம்பங்கள் எல்லாம் இன்று நடைபெறுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மௌலானா தெரிவித்தார்.

எங்கள் மத்தியில் எவ்வாறான சவால்கள் வந்தாலும் இனங்களுக்கடையில் இருக்கின்ற நல்லுறவுகள் தொடர்ந்து இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் ஆறு இலட்சம் பேருக்கு சமுர்த்தி கொடுப்பனவினை வழங்கும் திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வறிய மக்களுக்கான சமுர்த்தி உரிமம் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மௌலானா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 1630 பேர் சமுர்த்தி உதவி பெறுபவர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 230பேருக்கான உரிமங்கள் இன்றைய நிகழ்வின்போது வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதந்தர்சன்,சமுர்த்தி பிராந்திய முகாமையாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
நாங்கள் பல சவால்களை சந்தித்துவருகின்றோம்.ஒன்றுமுடியும் நேரத்தில் ஒன்றை எதிர்கொண்டுவருகின்றோம்.மூலையில்லாதவர்களை பயன்படுத்தி ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரமான சூழ்நிலையொன்று ஏற்படுத்தப்பட்டது.இதனை நாங்கள் கடுமையாக கண்டித்தோம்.
இவ்வாறான சம்பவங்களை மேற்கொண்டவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் எமது சமூகம் சட்டம் ஒழுங்கை மேற்கொள்பவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றும் கூட சட்டைசெய்யாத காரணத்தினால் இந்த பாரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று சட்டத்தினை அமுல்நடத்தும் பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை கைதுசெய்யப்பட்டு வெளிப்படையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அவர்களும் சில வெளிப்பாடுகளை கொண்டுவரும்போது இதன் சூத்திரதாரிகள் யார் என்ற வெளிப்பாடுகள் தெரியவரும்.
மிகவும் ஒற்றுமையாகவும் சகோதரத்துவத்துடனும் வாழவேண்டியவர்களின் மத்தியில் சிலர் மிலேச்சத்தனமான விடயங்களை கட்டவிழ்த்துவிடப்பட்டதன் காரணமாகவே துரதிர்ஸ்டவசமான சம்பவங்களை எதிர்கொள்கின்றோம்.எவ்வாறான சம்பவங்கள் வந்தாலும் எங்களுக்குள் உள்ள நல்லுறவுகள் நட்பண்புகள் தொடர்ந்து இருக்கவேண்டும்.
எங்கள் எதிர்கால செல்வங்களுக்கு நல்ல கல்வியை வழங்கி பிரச்சினைகளில் எல்லாம் இருந்து மீண்டு எழுந்து ஒரு சமாதான,சகவாழ்வினை நாங்கள் வாழவேண்டும்.
சில அரசியல்வாதிகள் இவ்வாறான விடயங்களை பாவித்து கும்பிய குட்டையில் மீன்பிடிக்கபார்க்கின்றனர்.நல்லவிடயங்களை பேசவேண்டிய,கருணையே உருவான காவியுடை போர்த்தியவர்கள் இன்று போக்குரல் கொடுக்கின்றனர்.அநாகரிகமான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.
போர்த்திக்கொண்டிருக்கின்ற நல்ல தேரர்களை நாங்கள் மதிக்கின்றோம்.ஆனால் போர்த்திக்கொண்டிருக்கின்ற சில போக்கிரிகளும் இருக்கின்றார்கள்.அவர்கள் அரசாங்க உத்தியோகத்தர்களை மதிப்பதில்லை,நாட்டில் உள்ள சட்டதிட்டங்களை மதிப்பதில்லை.அவர்களே சட்டத்தினை கையிலெடுத்துக்கொண்டு செயற்படும் நிலையும் உள்ளது.
இந்த நாட்டில் சட்டமும் ஒழுங்கும் இல்லையென்றால்தான் இவர்கள் சட்டத்தினை கையிலெடுக்கவேண்டும்.ஆனால் ஜனாதிபதியே சட்டத்தினை மீறிச்செயற்பட்ட சந்தர்ப்பத்தில் நாங்கள் சட்டத்தின் ஊடாக நீதியைப்பெற்றோம்.நீதியை நிலைநாட்டமுடியும்.
சட்டத்தினை செயற்படுத்துபவர்களுக்கு உதவியாக நாங்கள் இருக்கவேண்டுமே தவிர அவர்களுக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.
இந்த நாட்டில் ஒவ்வொருவரும் எவ்வாறு சுயகௌரவத்துடன் வாழவேண்டும் என நினைக்கின்றீர்களோ அதுபோன்று மற்றவர்களையும் மதியுங்கள்.ஒவ்வொரு மதமும் நல்ல போதனைகளை தருகின்றது.