வெல்லாவெளி அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவப் பெருவிழா







 (வெல்லவூரான் எஸ்.நவா)
கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு  முத்துமாரியம்மன் ஆலய திருச் சடங்கு 06.07.2019 ஆம் திகதி சனிக்கிழமை மாலை கும்பம் வைத்து திருக்கதவு திறக்கப்பட்டு ஆரம்பமாகிறது.
தித்திக்கும் தமிழ் கொடுத்து தெவிட்டாத சுவையூட்டி எத்திக்கும் புகழ் சேர்க்கும் மீPன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாநகரின் சுமார் 32 கிலோமீற்றர் தொலைவில் பூர்வீக கிராமமாக விளங்கும் வெல்லாவெளி கிராமத்தின் மத்தியில் வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு திருக்கதவு திறக்கப்பட்டு ஆரம்பமாகிறது.  
ஆரம்ப காலத்தில் சிறு தெய்வ வழிபாட்டில் பத்தினித் தெய்வங்களுக்குரிய வழிபாடானது அகோரபக்தி உணர்வுடன் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக கிராமங்கள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் அம்மன் வழிபாடு கிராமிய சிறுதெய்வ வழிபாட்டில் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
அம்மன் வழிபாட்டில் காவியங்களும்,காப்பியங்களும் உடுகு அடித்து மெய் மறந்து உருக்கமான வழிபாட்டின் மூலம் பயபக்தியுணர்வுடன்  மேற்கொள்ளப்பட்டு வருவது இதன் சிறப்பாகும். திருவிழாவின் போது மெய்யடியார்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக ஆடல் பாடலுடன் பஜனைபாடுதல், அன்னையர்கள் கற்பூரசட்டி ஏந்திவருதல்,அங்கபுரதட்சனை, காவடியாட்டம் மடிப்பிச்சை எடுத்துவருதல்,பால்குடபவனி, தீப்பாய்தல் தாலாட்டு பாடுதல் என்பன இவ்வாயலத்தினுடையசிறப்பம்சமாகும்.