இலங்கை நிருவாக சேவை போட்டிப்பரிட்சையில் தமிழ் மொழி பேசும் சமூகத்துக்கு பாரிய அநீதி.
இலங்கையின் அதி உன்னதமான நிருவாக சேவை பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்க்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரிட்சைக்கான விண்ணப்பங்கள் வர்த்தமானி மூலம் கோரப்பட்டுள்ளது, குறித்த வர்த்தமானி அறிவீத்தலில் கோரப்பட்ட தகமைகளுக்கு அமைய வடகிழக்கில் கடமை புரியும் தமிழ்மொழி பேசும் யாரும் விண்ணப்பிக்க முடியாத வகையில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதாவது இலங்கை நிருவாக சேவைகள் தரம் மூன்று பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்க்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரிட்சைக்கு 2018.07.01 ம் திகதிக்கு முன்னர் அரசசேவையில் இணைந்து ஜந்து வருடங்களை பூர்த்திசெய்தவர்கள்/ ஜந்து சம்பள உயர்வுகளை பெற்றவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என தகமை ஒன்று வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் 2013ம் வருடத்தில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதன் அடிப்படையில் சிங்களவர்களும் வடகிழக்குக்கு வெளியே வசிக்கும் தமிழர்கள் மாத்திரமே இந்த போட்டிப்பரிட்சைக்கு தோற்றமுடியும்.
வடகிழக்கு பட்டதாரிகளுக்கு (அம்பாறை மாவட்டம் தவிர்ந்த ) அப்போதைய அரசால் 2013.07.02, 2013.07. 09, 2013. 07. 14 ஆகிய திகதிகளிலே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் வருட அடிப்படையில் ஜந்து வருட பூர்த்தி என்பது ஒரு நாள் மற்றும் பதிநான்கு நாட்கள் வித்தியாசம் உள்ளது.
எனவே இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட திகதியில் மாற்றம் கொண்டு வரப்படாதவிடத்து வடகிழக்கில் தமிழ் மொழி பேசும் யாருக்கும் பரிட்சைக்கு தோற்றுவதற்க்கான வாய்ப்பு கிடைக்காமல் போகும்.
அந்த வகையில் குறித்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி தமக்கான நீதியை பெற்றுத்தரக்கோரி மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சார்பாக மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி தலைவர் லோ.தீபாகரன் அவர்களினால் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தே கோரிக்கை கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.