மட்டக்களப்பில் வங்கி ஊழியர்கள் வீதியில் இறங்கி போராட்டம்

அரசாங்கம் விதித்துள்ள வரி விதிப்பினை நீக்குமாறு கோரி மட்டக்களப்பில் அரச வங்கி ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு மற்றும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

அகில இலங்கை இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த பணி பகிஸ்கரிப்பும்,கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இன்று பகல் 12.00மணி தொடக்கம் 1.00மணி வரையில் பணி பகிஸ்கரிப்பினை மேற்கொண்ட வங்கி ஊழியர்கள் காந்திபூங்காவில் இருந்து பேரணியொன்றை ஆரம்பித்து மணிக்கூண்டு கோபுரம் வரையில் வருகைதந்தபின்னர் அங்கு கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

வங்கி ஊழியர்கள் பெறும் கடன்களுக்கு அரசாங்கத்தினால் மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளதை நீக்குமாறும் ஓய்வூதிய பிரச்சினைகளை தீர்க்குமாறும் இதன்போது அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்தனர்.

ஊழியர்களின் உணவுக்கும் தேனீருக்கும் வரிவேண்டாம்,ஊழியர்களின் கடன்களுக்கு வரிவேண்டாம்,ஓய்வூதிய கொடுப்பனவு வளுக்களை திருத்துக,ஏற்றுக்கொள்ளத்தக்க ஓய்வூதிய கொடுப்பனவை தாருங்கள் உட்பட பல கோரிக்கைகள் அடங்கி பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இதன்போது அரசாங்கம் தமது நியாயமான கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளுமாறு கோசங்களையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.