மது,மாது பழக்கம் இருப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விடுதலைப்புலிகள் வழங்கியுள்ளனர் –சிறிநேசன் எம்.பி.

எங்களது இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தால் இந்தியாவுக்கு தலையிடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது,நோர்வே தலையிடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. பல்வேறு நாடுகளும் தமது சுயதேவைகளுக்காக எமது நாட்டில் கால்பதிக்கும் நிலையேற்பட்டிருக்காது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,கல்லடியில் உள்ள வொய்ஸ் ஒப்மீடியா கற்கைகள் நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

சிறுபான்மை மக்கள் பலத்த எதிர்பார்ப்புடன் இன்றைய ஜனாதிபதியை பலத்த போராட்டத்தின் மத்தியில் ஜனாதிபதியாக்கினார்கள்.ஆனால் இன்று சிறுபான்மை மக்கள் அவர் மீது நம்பிக்கையிழந்த நிலையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.

இன்று ஜனாதிபதி பல்வேறு கருத்துகளை கூறிவருகின்றார்.போதைவஸ்துக்கு எதிரான கருத்துகளை முன்வைத்துவருகின்றார்.உண்மையில் போதையற்ற நாட்டில்தான் சுயசிந்தனையுடைய ஒரு மக்கள் கூட்டத்தினை உருவாக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை மாத்திரம் கருத்தில்கொண்டு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு கையொப்பம் இட்டுள்ளார்.40வருடங்களுக்கு முன்னர் இருந்த மரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கான நிலையினை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்.

கடுமையான குற்றங்களை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற நிலையேற்பட்டாலும் சிலவேளைகளில் அப்பாவிகளின் உயிர்களைக்கூட காவுகொள்ளப்படும் நிலையேற்படலாம்.மறுக்கப்பட்ட சுதந்திரத்திற்காக போராடிய விடுதலை வீரர்களுக்கும் இந்த மரண தண்டனை சென்றடையக்கூடிய நிலையுருவாகலாம்.பகைமையினை முடிப்பதற்கு கூட சிலவேளைகளில் பயன்படுத்தக்கூடிய அச்சம் இருக்கின்றது. சில நாடுகளில் மரண தண்டனைக்கு பதிலாக சீர்திருத்த தண்டனை அமுல்படுத்தப்படுகின்றது.

மரண தண்டனை என்கின்ற விடயம் ஆளமாக பரிசீலிக்கவேண்டியது.
இன்று குழம்பிய குட்டைக்குள் எவ்வாறு மீன்பிடிக்கலாம் என்ற வகையில் பலர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.எப்படியாவது அதிகாரத்திற்கு வரவேண்டும்,ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற ரீதியில் தாங்கள் செய்த குற்றங்களை,அடாவடித்தனங்களை மறைத்துகொள்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தினை தேடிக்கொள்கின்ற முன்னாள் ஆட்சியாளர்களையும் நாங்கள் பார்க்ககூடியதாகவுள்ளது.

அதிகாரபோதை,அந்தஸ்துபோதை,அடக்கியாளவேண்டும் என்ற போதைகொண்ட அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள்.பதவி சுகத்தினை அனுபவிக்கவேண்டும் அதன்மூலம் சுகபோகத்துடன் வாழவேண்டும் என்கின்ற நோக்குடன் செயற்படும் அரசியல்வாதிகள் எவ்வாறாவது ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற நோக்குடன் செயற்படுகின்றார்களே தவிர இனப்பிரச்சினையை தீர்க்கவேண்டும்,பன்முகத்துவ சமூகத்தினை சமநிலையில் கொண்டுசெல்லக்கூடிய வகையில் செயற்படுவதில்லை.
ஐஎஸ்ஐஎஸ் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் நடைபெறுவதாக கூறப்படுகின்றது.எந்தச்செயல் நடைபெற்றாலும் அப்பாவி மக்கள் பாதிக்க்படக்கூடாது.எந்த இனமாக இருந்தாலும்.உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.

இந்த நாட்டில் 58 ஆம்ஆண்டுக்கு பின்னர் அப்பாவி தமிழ் மக்கள் மீது பெரும்பான்மை கடும்போக்காளர்களினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள்தான் பின்னர் ஆயுதப்போராட்டங்கள் தோற்றம்பெறுவதற்கு காரணமாக அமைந்தன.

நியாயமான அரசியல் தீர்வு கிடைக்காமைக்கான காரணம் அகிம்சை சாத்வீகரீதியான போராட்டங்கள் வெற்றிபெறாத நிலையில் அகிம்சை போராட்டத்தினை ஆயுத போராட்டங்கள் மேவி நின்றதன் காரணமாகவே இலங்கையில் ஏற்பட்ட விளைவு என்பதை தற்போதைய ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள தயாராகயில்லை.கடந்த கால ஆட்சியாளர்களும் உணர தயாராகயில்லை.

குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை அப்பாவிகளாகவுள்ளவாகளை வீண் வம்புகளுக்கு இழுக்கின்றபோது அதன் எதிர்விளைவுகள் சிலவேளைகளில் விபரீதமாக இருக்ககூடிய வாய்ப்புகள் இருக்கின்றது.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் ஒழுக்கவிழுமியங்களில் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்தவர்கள்.மது,மாது பழக்கம் இருப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விடுதலைப்புலிகள் வழங்கியிருந்தனர்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் காலத்திற்கு காலம் கருத்துகளை மாற்றிமாற்றிபேசுவதுபோன்று தமிழீழ விடுதலைப்புலிகள் போதைவஸ்து வியாபாரம் மூலமே போராட்டங்களை நடாத்தினார்கள் என்பதை எந்த தமிழ் குடிமகனும் ஏற்றுக்கொள்ளமாட்டான். இது அப்பட்டமான,வடிகட்டிய பொய்யாகும்.ஜனாதிபதியின் இக்கூற்று என்பது தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்துவதற்கு புனைக்கப்பட்ட ஒரு கதையாகவே நான் பார்க்கின்றேன்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான உறுதிமொழிகள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.எல்லை நிர்ணயம் செய்யவேண்டும் என்பதற்காக கால அவகாசம் கோரப்பட்டு வழங்கப்பட்டது.
வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்க உணர்வுடன் உண்ணாவிரத போராட்டங்களை ஒருசாரார் நடாத்தினர்.ஒருசாரார் அந்த போராட்டத்தினை பார்வையிடச்சென்றவர்கள்.இன்னுமொரு சாரார் அதனை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய முயற்சித்தவர்கள்.

கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் செய்த பிழைகளையெல்லாம் தள்ளிவிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்புதான் இந்த நாட்டினை ஆள்வதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருப்பதான அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது குற்றஞ்சுமத்துபவர்கள் இருக்கின்றார்கள்.

அன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம் நடைபெற்ற இடத்தில் பல தரப்பட்டவர்களும் நின்றிருந்தனர்.தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான கருத்துகளைக்கொண்ட மற்றும் அக்கட்சிக்கு எங்காவது ஏதாவது செய்யவேண்டும் என்கின்ற மனப்பாங்குடன் உள்ள வேறு கட்சிகளை சார்ந்த பிரகிருதிகளும் அங்கு இருந்தனர்.அங்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட எமது கட்சியை சார்ந்தவர்கள் சென்றபோது அவர்கள் எங்கள் கட்சிமீது தமது காழ்ப்புணர்வினை காட்டுதவற்கு அதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டனர்.

மூன்றுமாத கால அவகாசம் என்பதை உண்மையில் ஏற்றுக்கொள்ளமுடியாது.அதனை அங்கு தெரிவித்திருந்தமையும் ஏற்புடையதாகயில்லை என்பதே எனது கருத்தாகும்.

ஞானசார தேரர் போன்றவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் கடந்த காலத்தில் எவ்வாறு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.சில தேரர்கள் முன்னைய ஆட்சியை எவ்வாறு மீண்டும் கொண்டுவராலாம் என்று சிந்தித்துசெயற்படுபவர்களும் இருக்கின்றனர்.இவ்வாறானவர்கள் எல்லாம் இணைந்துதான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான செயற்பாடுகளை இணைந்துமேற்கொண்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை நாங்களே செய்யவேண்டும்.தமிழ் தேசிய கூட்டமைப்பு காரியத்தினை செய்யவேண்டும்,அதனை விமர்சனம் செய்வதற்கு பல்வேறுபட்டவர்கள் இருக்கின்றார்கள் என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.
முஸ்லிம்களை பொறுத்தவரையில் நாங்கள் கேட்டுக்கொள்வது எங்களது பிரச்சினைகளை நாங்கள் தீர்க்காவிட்டால் எங்களது பிரச்சினைகளை கைகளில் எடுத்துக்கொண்டு அரசியல் செய்வதற்கு எத்தனையோ பெருச்சாலிகள் காத்திருக்கின்றார்கள்.இதனை நாங்கள் முஸ்லிம் காங்கிரசிடமும் வலியுறுத்தியுள்ளோம்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது ஒரு நிர்வாகம் தொடர்பான பிரச்சினையாக மட்டுமே பார்க்கவேண்டும்.இது அரசியல் தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றும் இடமல்ல.இது நிர்வாக ரீதியான பிரச்சினைகளை தீர்க்கும் இடமாகவே பார்க்கப்படவேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீள கட்டியெழுப்பவேண்டுமானால் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மட்டுமல்ல,இன்னும் பல தமிழ் பிரதேச செயலகங்களை தமிழ் பிரதேச செயலகங்களில் உருவாக்கவேண்டும்.
எங்களது பிரச்சினைகளை நாங்கள் தீர்க்காவிட்டால் யாரோ ஒருவர் வந்து அந்த பிரச்சினையை தான்தான் முடித்தேன் என்ற நிலையில் அமையும்.ஞானசார தேரர் சென்றவுடன் அவர்கள் உண்ணாவிரதத்தினை முடித்துள்ளார்கள் என்றால் அந்த இடத்தில் எதனை நம்பி அவர்கள் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்தார்கள் அவர் என்ன உத்தரவாதம் வழங்கினார் என்பது தொடர்பில் அவர்கள் சிந்திக்கவேண்டும்.

எமது பிரச்சினையை நாங்கள் தீர்க்காவிட்டால் பிறர்,பிற நாட்டவர்கள் அதில் அக்கரைகொள்வார்கள்.எங்களது இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தால் இந்தியாவுக்கு தலையிடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது,நோர்வே தலையிடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.பல்வேறு நாடுகளும் தமது சுயதேவைகளுக்காக எமது நாட்டில் கால்பதிக்கும் நிலையேற்பட்டிருக்காது.நாங்கள் ஆளுமையுள்ள தலைவர்களாக இல்லாதபோது யாரோ ஒருவர் எங்களுக்கு எஜமானர்களாக மாறுவார்கள்.
பேச்சுhவார்த்தையூடாக ஒரு தீர்வினை வழங்கவேண்டும் என்ற ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ளது.ஒருமித்த நாட்டிற்குள் அதிகார பகிர்வினைச்செய்து ஆக்கபூர்வமான ஆதரவுகள் அனைத்தையும் வழங்கியுள்ளோம்.

எமக்கான நியாயமான தீர்வினை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க அரசாங்கம் தவறுமானால் சர்வதேசத்திடம் சென்று அந்த தீர்வினைப்பெற்றுத்தருமாறு கொரும் நிலை  எங்களுக்கு உருவாகும் என்றார்.