கிழக்கு மாகாணத்தில், உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்களாக, ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு முரணாக, நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதனை நிறுத்தி ஆட்சேர்ப்பு திட்டத்திற்கமைய ஆடசேர்ப்பினை செய்ய வேண்டும் என அனைத்து முகாமைத்து உதவியாளர்கள் தொழிற் சங்கத்தின் செயலாளர் நாயகம், வீ.பற்குணம், கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக் குழு, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
இக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, மாகாண கணக்காய்வு உத்தியோகத்தர்களுக்கான, ஆளுநரினால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆட்சேர்ப்புத் திட்டத்தில், குறிப்பிட்ட தகமைகளைக் கொண்டவர்களிடையே மட்டுப்படுத்தப்பட்ட, திறந்த அடிப்படையில் போட்டிப் பரீட்சை அடிப்படையிலயே ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நேர்முகப் பரீட்சை ஒன்றினூடே ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளதாக அறியக் கிடைக்கின்றது. இது மாகாண கணக்காய்வுத் திணைக்களத்தில் கடமையாற்றும் சந்தர்ப்பம் கிடைக்காத ஏனைய திணைக்களங்களில் கடமையாற்றிக் கொண்டிருக்கு உரிய தகமைகளைக் கொண்ட திறமையானவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இது அவர்களது அடிப்படை உரிமை மீறலுமாகும்.
அத்துடன் நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறும்போது, அரசியல் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கு மேலோங்கி நியாயமானதொரு ஆட்சேர்ப்பாக அமையாமல் விடவும் வாய்ப்புள்ளது. எனவே ஆட்சேர்ப்புத் திட்டத்தில் குறிப்பிட்டதற்கமைய போட்டிப் பரீட்சை மூலம் உரிய ஆட்சேர்ப்பினை நிகழ்த்தும்படி கேட்கப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு முரணாக போட்டிப் பரீட்சையின்றி ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுமாக இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கொன்றினை தாக்கல் செய்வதற்கு சங்கம் தயாராகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
