மட்டக்களப்பில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார இறுதி நிகழ்வு

தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தினையொட்டி போதையிலிருந்து விடுபட்ட நாட்டினை உருவாக்கும் ஜனாதிபதியின் செயற்திட்டத்துக்கமைய இறுதி நாளான இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான இறுதி நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேலதிக,உதவி அரசாங்க அதிபர்கள்,பிரதேச செயலாளர்கள்,மாவட்ட செயலக திணைக்கள தலைவர்கள்,உத்தியோகத்தர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நிகழ்வின் ஆரம்பத்தில் போதைப்பாவனையினை தடுக்கும் வகையிலான உறுதிமொழி வாசிக்கப்பட்டு அதனை அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து போதைப்பாவனையினை தடுக்கும் கையெழுத்துப்பெறும் பணியினை மாவட்ட அரசாங்க அதிபர் கையெழுத்திட்ட ஆரம்பித்துவைத்தார்.

இதன்போது போதைப்பாவனையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த வீதி நாடகம் ஒன்றும் கிரான்குளம் யுகா கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.