Breaking News

ஆயுத பலம்தான் தமிழர்கள் வாழ்வுரிமையை மீளப்பெற்றுக்கொடுக்குமா?


ஆயுதம் ஏந்திப் போராடினால்தான் அரசியல் தீர்வு குறித்து ஆக்கபூர்வமான கருமங்களைப் பெறமுடியும் என்றால் அதுகுறித்து சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறைகூவல் . 
இலங்கை தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் கடந்த சனி   ஞாயிற்றுக்கிழமைகளில் 29.06,  30.06 ஆகிய தினங்களில் நடைபெற்றது. 
  30.06.2019 ஞாயிற்றுக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் பேராளர் மாநாடு நடைபெற்றது  இதன்போது உரையாற்றுகையிலேயே தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்மந்தன்  இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “உள்ளக சுயநிர்ணய உரிமையுடன், நிரந்தரமாக பாதுகாப்புடன் தமிழர்கள் வாழ வேண்டும். 

தந்தை செல்வா கட்சியை ஆரம்பித்து ஏறத்தாழ 70 வருடங்கள் ஆகிவிட்டன. அந்தப் பாதையில் நாங்கள் நீண்டதூரம் பயணித்திருக்கின்றோம். சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம். இன்னும் இறுதியானதும், உறுதியுமான முடிவுகளை எட்டவில்லை.
இந்த நாட்டில், இரண்டாம் தரப் பிரஜைகளாக, அடிமைகளாக வாழ வேண்டிய அவசியமில்லை.
தற்போது வடக்கு மாகாணத்தில் பல குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றி அமைக்கக்கூடிய வகையில், பல்வேறு வழிகளில் பல கருமங்கள் நடைபெற்று வருகின்றன. 

இதனாலேயே அதிகாரப் பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்காமல், இருக்கின்றார்கள் போல எமக்குத் தெரிகின்றது.
இவைகள் பாரதூரமான விடயங்கள், இவற்றை அனுமதிக்க முடியாது. இவற்றிற்கு மிக விரைவில் முடிவு காணுவோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் பல கருமங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர், புதிய அரசாங்கத்தின் கீழ், புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதென்று தீர்மானிக்கப்பட்டு, அந்த தீர்மானத்தின் அடிப்படையில், நாடாளுமன்றம் ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றி அமைக்கப்பட்டு, பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் ஆயுதம் ஏந்தியவர்கள், எமக்காக பேச முடியாத சூழ்நிலையில், இன்று அவற்றைப் பயன்படுத்தி தாமதப்படுத்துவதற்கான சூழ்நிலை காணப்படுகின்றது.
ஆயுதம் ஏந்திப் போராடினால், தான் அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆக்கபூர்வமான கருமங்களைப் பேணுவீர்கள் என்றால்,  ஆயுதப் பலம் இல்லாவிடின் அதை கைவிடுவோம் என நீங்கள் இருப்பீர்களானால், அது ஒரு தவறான நிலைப்பாடாகும்.

 அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதை நாங்கள் பரிசீலிப்போம்.
யுத்தம் நடைபெற்ற போது, அரசாங்கம், சர்வதேச சமூகத்திற்கு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டால் பிரச்சினைகளை தீர்ப்போம் என வாக்குறுதியைக் கொடுத்தார்கள்.

 அவ்விதமான வாக்குறுதிகளின் அடிப்படையில், விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சர்தேசமும், இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு வழிகளில் உதவினார்கள். அதன் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்டார்கள்.
இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாமல் செய்யப்பட்டதன் பின்னர், வாக்குறுதிகள் காற்றில் பறக்கின்றன. அவற்றை நிறைவேற்றக் கூடிய நிலைமை இருப்பதாக தெரியவில்லை. 

அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமைப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடியது. எமது பிரச்சினை தீர்க்கப்படாமல், நீண்ட காலமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருந்தததன் காரணமாகவே.
40 வருடங்களாக எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். சர்வதேச ஒப்பந்தங்கள் செய்தார்கள். பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், பிரச்சினை தீரவில்லை. 

அதற்கு மாறாக தமிழ் மக்கள் மீது, அட்டூழியங்கள்,  பலாத்காரங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்தச் சூழ்நிலையில் தான், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும், அழித்தால், அரசியல் தீர்வை வழங்குவோம் என்ற வாக்குறுதியை மறந்துவிட்டீர்கள் போல் தெரிகின்றது. அதனை மறக்கப் பார்க்கின்றீர்கள் போல் தெரிகின்றது.
அதை நாங்கள் அனுமதிக்க முடியாது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தக் கருமங்களை நிறைவேற்றக்கூடியவாறு, திட்டங்களை தீட்டி செயற்பட வேண்டிய நிலமை தற்போது ஏற்பட்டுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார் .

No comments