மட்டக்களப்பு மாநகரசபையின் 21வது அமர்வு –தோற்கடிக்கப்பட்ட பிரேரணை

மட்டக்களப்பு மாநகரசபையின் 21வது அமர்வு இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

இன்றைய அமர்வின் ஆரம்பத்தில் மாநகரகீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து மௌன இறைவணக்கத்துடன் சபை அமர்வுகள் ஆரம்பமானது.இதன்போது கடந்த அமர்வின் கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு சில திருத்தங்களுடன் கூட்டறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.அதனை தொடர்ந்து மாநகரசபைக்குள் முன்னெடுக்கப்பட்ட முன்மொழிவுகள் வாசிக்கப்பட்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினராக இருந்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் உறுப்பினர் சோமசுந்தரத்தின் பதவி கட்சியின் செயலாளரினால் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று குபேரன் என்பவர் அக்கட்சியினால் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மாநகரசபை நடவடிக்கையில் இன்று கலந்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து உறுப்பினர்களினால் முன்மொழியப்பட்டுள்ள முன்மொழிவுகள் வாசிக்கப்பட்டன. இதன்போது கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்நீர்த்தவர்களுக்கு நினைவுத்தூபியொன்றை அமைக்கநடவடிக்கையெடுக்குமாறு உயிர்நீர்த்தவர்களின் உறவினர்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் எனவே மட்டக்களப்பு நகரில் நினைவுத்தூபியொன்றை அமைக்க நடவடிக்கையெடுக்குமாறு மாநகரசபை உறுப்பினர் என்.திலீப்குமார் முன்வைத்த முன்மொழிவுகளுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபையினால் கடந்த20வது அமர்வில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களின் நினைவாக தூபி அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது அந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டுவரும் நிலையில் மேலும் ஒரு தூபி அமைக்கப்படவேண்டிய அவசியம் இல்லையென கருத்துகள் முன்வைக்கப்பட்டன.இதன்போது பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த பிரேரணைக்கு வாக்கெடுப்பு தொடர்பில் திலிப்குமாரினால் கோரிக்கை விடுக்கப்பட்டபோது குறித்த பிரேரணைக்கு வாக்கெடுப்பு தேவையா என்பது தொடர்பில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இந்த நிலையில் வாக்கெடுப்பு தேவையில்லையென 20பேரும் வாக்கெடுப்பு தேவையென 12பேரும் நான்கு பேர் நடுநிலை வகித்ததுடன் இருவர் சபைக்கு சமூகமளிக்காத நிலையில் வாக்கெடுப்புக்கு போக தேவையில்லையென 08மேலதிக வாக்களினால் நிராகரிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.