வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் தேவாலயத்தின் 175வது ஆண்டு நிறைவும்-கொடியிறக்கமும்

கிழக்கிலங்கையில் மிக பழமையான தேவாலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவும் ஆலயத்தின் 175வது ஆண்டு நிறைவு விழாவும் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.


175வது ஆண்டு நிறைவு செய்துள்ள தேவாலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 10 தினங்களாக சிறப்பாக நடைபெற்றுவந்த நிலையில் நேற்று அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெற்றது.

இன்று காலை 175வது ஆண்டு நிறைவு ஜுபிலி நிகழ்வும் திருவிழா கூட்டுத்திருப்பலியும் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு விமானப்படை பணியகத்தின் கட்டளை அதிகாரி மெண்டிஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது 175வது ஆண்டு நிறைவினையொட்டியும் திருவிழா கொடியிறக்கத்தினையொட்டியும் ஆயரினால் விசேட கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதன்போது நாட்டில் நீடித்த சமாதானமும் சாந்தியும் ஏற்படவேண்டும் என்ற விசேட பிரார்த்தனையும் செய்யப்பட்டது.

அதிதிகள் ஆயரினால் கௌரவிக்கப்பட்டதுடன் குருத்துவ வாழ்வில் 31ஆண்டுகளை இன்றுடன் பூர்த்திசெய்துள்ள புனித அன்னம்மாள் ஆலயத்தின் பங்குத்தந்தை இன்னாசி ஜோசப் அடிகளார் ஆயர் உட்பட குருமார்களினால் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் ஆலய திருவிழாவுக்கு பங்களிப்பு செய்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து ஆலய முன்றிலில் ஆலயத்தின் பங்குத்தந்தையின் விசேட பூஜைகளுடன் கொடியிறக்கம் சிறப்பாக நடாத்தப்பட்டது. ஆலயத்தின் இன்றைய கொடியிறக்க திருவிழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.