தோல்வியில் முடிந்த போராட்டம் -தொடரும் உண்ணாவிரத போராட்டம்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு மேற்கொள்ளப்பட்டுவரும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள போராட்டக்காரர்களுக்கும் அரச தரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
இதனால் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்றுடன் ஐந்தாவது நாளாகவும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுவருகின்றது.
கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் நடத்தும் போராட்ட இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர் மனோ கணேசன் மற்றும் தயா கமகே ஆகியோர் சென்றனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து பிரதமர் விடுத்துள்ள செய்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மதகுருமார்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதன்போது குறித்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு 3 மாதங்கள் அவகாசம் கோரப்பட்டுள்ளது.
எனினும், குறித்த அறிவிப்பை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. அத்துடன் அங்கு குழப்பநிலையும் ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் தமக்கான தீர்வினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுத்தரவேண்டும் என போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதேநேரம் எதிர்வரும் திங்கட்கிழமை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் நியமிக்கப்படுவார் எனவும் ஒரிரு வாரத்திற்குள் காணி அதிகாரங்களை வழங்க நடவடிக்கையெடுப்பேன் என இங்கு மனோகணேசன் சார்பில் அவரின் தேசிய இணைப்பாளர் ஜனகனாலும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராலும் உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.
குல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தும் வரையில் தமது போராட்டம் தொடரும் என இங்கு போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.