பட்டிப்பளை புளியடி அருள்மிகு ஸ்ரீ வைரவர் ஆலயத்தின் கும்பாபிசேகம்

கிழக்கிலங்கையில் மிகவும் பழமையானதும் வரலாற்றுசிறப்புமிக்கதுமான மட்டக்களப்பு,பட்டிப்பளை புளியடி அருள்மிகு ஸ்ரீ வைரவர் ஆலயத்தின் புனராவர்த்த பஞ்சகுண்ட பட்ஷ மகா கும்பாபிசேகம் இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் இயற்கை அன்னையின் அரவணைப்பில் பக்திவழிபாட்டிற்கு சிறந்துவிளங்கும் பட்டிப்பளை பிரதேசத்தில் பல நூற்றாண்டுகாலமாக கோயில்கொண்டு அருளிவரும் ஸ்ரீ வைரவர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக கிரியைகள் கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.

ஏறாவூர் வரசித்தி விநாயகர் பேராலய பிரதமகுரு சத்தியஜோத சிவாச்சாரியார் சிவஸ்ரீ அ.கு.லிகிதராஜக்குருக்கள் தலைமையில் மகா கும்பாபிஷேக கிரியைகள் நடைபெற்றன.

நேற்று புதன்கிழமையும் நேற்று முன்தினம் செவ்வாயக்கிழமையும் ஆலயத்தில் பரிபாலன தெய்வங்கள் மற்றும் மூலமூர்த்திக்கு அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இன்று வியாழக்கிழமை காலை முதல் புண்ணியாகவாசனம், யாகபூஜைகள், பஞ்சாக்கினி,வைரவ மாலாமந்திர ஹோமம்,பூர்ணாகுதி,பிரதான குண்ட உபசார ஹோம், மஹாபூர்ணாகுதி, பிரதட்ஷனா நமஸ்காரம் என்பன நடைபெற்று பிரதான கும்பங்களுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வேத,நாத ஓசைகளுடன் அடியார்களின் ஆரோகரா கோசங்களுக்கு மத்தியில் மூலமூர்த்தி கோபுரங்கள் உட்பட பரிபாலன மூர்த்தி ஆலய கோபுரங்கள் கும்பாபிசேகம் செய்யப்பட்டன.

பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மூலமூர்த்தியாக வைரவக்கடவுளுக்கு அபிசேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிசேகத்தினை தொடர்ந்து எஜமான் அபிசேகம்,தசதர்சனம்,மஹா அபிசேகம்,விசேட பூஜைகளும் நடைபெற்றன.இன்றைய கும்பாபிஷேக நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் இருந்து பெருமளவானோர் கலந்துகொண்டனர்.