பெரியகல்லாறில் குண்டு சத்தம் -பதற்ற மடைந்த பெற்றோர் –நடந்தது என்ன?

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் எந்தவித முன் அறிவுப்பும் இல்லாம் குண்டுசெயலிழக்கச்செய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்ததன் காரணமாக பெரியகல்லாறில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணையில் இருக்கும் விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப்பகுதியில் குண்டுகளை செயலிழக்கச்செய்துள்ளனர்.

பெரியகல்லாறு பகுதியில் உள்ள மக்களுக்கு எந்தவித முன்னறிவித்தலும் வழங்கப்படாத நிலையிலும் பாடசாலைகளுக்கு எந்தவித முன்னறிவித்தல்களும் வழங்கப்படாத நிலையிலும் இந்த குண்டுசெயலிழக்கச்செய்யும் நடவடிக்கையினை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

பெரியகல்லாறு பகுதியில் பாரிய சத்ததுடன் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றதன் காரணமாக பெரியகல்லாறு பகுதியில் கடற்கரையினை அண்டிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளான உதயபுரம் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் பெரியகல்லாறு மத்திய கல்லூரியில் பெற்றோர் குவிந்ததன் காரணமாக அங்கு பதற்ற நிலைமையேற்பட்டது.

இதன்போது பெற்றோர் அச்சசூழ்நிலையில் தமது பிள்ளைகளை பாடசாலையில் இருந்து அழைத்துச்சென்றதன் காரணமாக இரண்டு பாடசாலைகளும் இடையில் மூடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்த விசேட அதிரடிப்படையினர் அத்துமீறி மேற்கொண்ட நடவடிக்கையே இந்த நிலைமைக்கு காரணம் என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தினை தொடர்புகொண்டு கேட்டபோது களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் குறித்த குண்டுசெயலிழக்கச்செய்யப்போவதாக விசேட அதிரடிப்படையினர் கோரியபோது பாடசாலை நேரத்தில் செய்யவேண்டாம் என கூறிய நிலையிலும் அதனை மீறி விசேட அதிரடிப்படையினர் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவண்ணம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.