கிழக்கில் ஆட்பதிவு திணைக்களத்தின் நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் ஆட்பதிவு திணைக்களத்தின் செயற்பாடுகளை துரிதப்படுத்தி அனைவருக்கும் புதிய அடையாள அட்டையினை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இது தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் இயங்கும் ஆட்பதிவு திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இந்த நிகழ்வு ஆட்பதிவு திணைக்களத்தினால் நடாத்தப்பட்டது.

இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் ரஞ்சினி ஜெயக்கொடி,ஆட்பதிவுத்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஜெய்சாலி ரணவக்க,ஆட்பதிவு திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ஜி.அருணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த செயலமர்வின்போது ஆட்பதிவு திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது.

குறிப்பாக பழைய அடையாள அட்டைக்கு பதிலாக தற்போது வழங்கப்பட்டுவரும் புதிய அடையாள அட்டையினை அனைவரும் பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

ஆட்பதிவு திணைக்களத்தின் செயற்பாடுகளை துரிதாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் கொண்டுசெல்வதற்கு அதன் உத்தியோகத்தர்களின் பங்களிப்பின் அவசியம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.