திருகோணமலையின் அவலம் - நகரசபை கண்டு கொள்ளுமா?



இலங்கைத் தீவின் அழகுக்கு, புகழுக்கு,  உரித்தான கிழக்குமாகாணத்தின் தலைநகரம் இயற்கைத்துறைமுகம் கொண்ட திருகோணமலை. இந்த மாவட்டத்தில் இந்துக்களின்  ஆன்மீகத்துக்கு உரித்தான வரலாற்றுச்சிறப்பு மிக்க திருக்கோணச்சர ஆலயமும் கன்னியா வெந்நீர் ஊற்றும், என பல சிறப்பம்சங்கள் உண்டு.

திருகோணமலையில் சுற்றுலா பயணிகள் அதிகம் குவியும் பிரதேசங்களும், கடற்கரைகளும்  உண்டு, அந்த வகையில் நாளாந்தம் உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் ஆயிரக்கணக்கில் இங்கு பயணிக்கும் நிலையில் திருகோணமலை நகரில் உள்ள அரச மற்றும் தனியார் பேருந்து நிலையங்கள் தரமானதாக இல்லை.

முறையாக பராமரிப்பு அற்ற நிலையில் ஆசனங்கள் பழுதடைந்து, பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அமர்ந்திருக்க முடியாது அவதியுறுகின்றனர். 

நிழலுக்காகவேணும் ஒதுங்கி நிற்க என்றாலும் அதுவும் முடியாத துர்ப்பாக்கியம் காகங்கள் எச்சமிட்டு மிக மோசமான அசிங்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் , நாய்களின் தொல்லையும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளன.

இந்த நிலைமையை ஏன் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை என பயணிகள் கேள்வி எழுப்புவதுடன் திருகோணமலை நகரினதும், மாவட்டத்தினதும் புகழையும், மகிமையும் பாதுகாக்க நகரசபை உட்பட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அனைவரும் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.