மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறிய வியாழேந்திரன்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் இன்று காலை ஆரம்பமான நிலையில் சுற்றுநிரூபங்களுக்கு மாறாக அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்கள் நியமனம் செய்யப்படுவதாக கூறி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் அலிசாகீர் மௌலானா,பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்
தலைமையில் நடைபெற்றது. இதன்போது கடந்த மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பு உட்பட பல பகுதிகளிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களுக்கு ஆத்மசாந்திவேண்டி இரண்டு நிமிடங்கள் மௌன பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் உரையுடன் கூட்டம் ஆரம்பமான நிலையில் இதன்போது முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றுநிரூபத்திற்கு மாறாக மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் சுற்று நிருபங்களுக்கு மாறாக நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

குறித்த நியமனம் ஐக்கிய தேசிய கட்சியின் சிபார்சிக்கு அமைவாக ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுற்று நிரூபத்திற்கு மாறாக இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அலிசாகீர் மௌலானா ஜனாதிபதி கடந்த காலத்தில் அரசியலமைப்புக்கு மாறாக ஆட்சியை கலைத்து ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியதாகவும் அவரினாலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனையும் நீதிமன்றம் சென்றே நாங்கள் தீர்க்கும் நிலையேற்படலாம் எனவும் இங்கு சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் தமக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைவாகவே தாங்கள் இந்த கூட்டத்தினை நடாத்துவதாகவும் அதன் காரணமாக இவ்வாறன கேள்விகளுக்கு அரசாங்கத்திடமே பதிலைபெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர்,இந்த கூட்டம் அபிவிருத்தி தொடர்பாக மட்டுமே கலந்துரையாடமுடியும் எனவும் மாறாக அரசாங்கத்தின் நியமனம் தொடர்பில் கலந்துரையாடமுடியாது என தெரிவித்தார்.

இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்திலும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடியே தீர்வினைப்பெற்று அடுத்த கூட்டத்தில் இது தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என இங்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தா.

எனினும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றுநிரூபத்திற்கு மாறாக நடைபெறும் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தம்மால் கலந்துகொள்ளமுடியாது என தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கூட்டத்தில் இருந்து வெளியேறிச்சென்றார்.