கிழக்கில் முதலீடுசெய்ய கிழக்கு தமிழர்கள் முன்வரவேண்டும் -தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அழைப்பு

இலங்கையில் தாக்குதல் நடக்கப்போகின்றது என்ற புலனாய்வுத்தகவல்கள் கிடைத்தும் அதனை தடுக்கமுடியாத இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எவ்வாறு தீர்வினை வழங்கப்போகின்றது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

சர்வதேச தொழிலாளார் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் சர்வதேச மேதின நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சர்வதேச மேதின நிகழ்வுகள் இன்று பகல் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தொழிற்சங்க தலைவர் உ.யுவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள்,உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு உட்பட பல்வேறு பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அமைதியான முறையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

தேசியக்கொடி,தொழிற்சங்க மற்றும் கட்சி கொடிகள் ஏற்றப்பட்டு குண்டுத்தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து மேதின நிகழ்வுகள் நடைபெற்றன.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பல்வேறு வழிகளிலும் தொடர்ச்சியாக பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாகவும் கிழக்கில் தமிழர்களின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் முன்வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பொருளாதார ரீதியாக தங்களை கட்டியெழுப்பவேண்டிய தேவையிருப்பதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

புலம்பெயர்நாடுகளில் உள்ள கிழக்கு தமிழர்கள் கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.