மட்டக்களப்பில் குண்டுவெடிப்பு –மட்டக்களப்பு மாநகரசபையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றம்

மட்டக்களப்பு மாநகரசபை 18வது அமர்வில் 21ம் திகதி உயிரிழந்த உறவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுத் தூபி அமைக்கும் பிரேரணை மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிகூடிய கவனம் செலுத்துவது தொடர்பான தீர்மானம் போன்றன நிறைவேற்றப்பட்டுள்ளன.

 மட்டக்களப்பு மாநகரசபையின் 18வது அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வில் மாநகர பிரதிமுதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் க.சித்திரவேல் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சபை அமர்வு நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் கடந்த 21.04.2019ம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இருநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்தே சபை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது முதல்வரின் அறிக்கை, நிதிக் குழுவின் சிபாரிசு, உறுப்பினர்களின் பிரேரணைகள் எனப் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன.

இவ்வேளை மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் அவர்களினால் கடந்த 21ம் திகதி படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஞாபகார்த்தமாக மாநகர எல்லைக்குள் புளியந்தீவு பகுதியில் குறிப்பாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஒரு நினைவுத் தூபியை நிர்மானிப்பது தொடர்பில் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இப்பிரேரணை அனைவரினாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இதனை 41ம் நாள் நினைவு தினத்திற்கு முன்னர் நிர்மானித்து திறக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையும் மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா அவர்களினால் முன்வைக்கப்பட்டது.

இப்பிரேரணை சபையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந் நினைவுத் தூபியை நிர்மானிப்பது தொடர்பில் பிரேரணையை முன்வைத்த மாநகரைசபை உறுப்பினர் து.மதன் அவர்களின் தலைமையில் மாநகரசபை உறுப்பினர்களான கிளனி வசந்தகுமார், வே.தவராஜா, றொனி பிரின்ஸஸ், ராஜன் ஆகிய ஐவர் அடங்கிய குழு மாநகர முதல்வரினால் அமைக்கப்பட்டு நினைவுத் தூபி வடிவமைப்பு தொடர்பில் நான்கு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பித்து பின்னர் இதன் வேலைப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு 41வது நாள் நினைவு தினத்துக்குள் இதனை நிறைவுறுத்துவது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இப்பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் அனைத்து மக்கள் மத்தியிலும் ஒரு பதற்ற நிலை காணப்படுவதோடு பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பிலும் அனைவரும் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்ற தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது. அதன் நிமித்தம் மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் பாடசாலைக்கு அருகாமையிலுள்ள பள்ளிவாசலின் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது பாடசாலைக்கு முன்பகுதியிலோ அல்லது அதன் அருகாமையிலோ வாகனங்களை நிறுத்துவதைத் தடை செய்வது தொடர்பிலும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் முகத்தினை மறைக்ககூடிய வகையிலான பர்தாவினை அணிவதற்கும் தடைவிதிப்பதற்கான தீர்மானம் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்திசீலனால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.