சம்மாந்துறையில் இன்றும் பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு

பயங்கரவாதிகளால் மறைத்து வைத்ததாக நம்பப்படும் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்கம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது பாழடைந்த வீடு ஒன்றில் புதைக்கப்பட்ட நிலையிலேயே இந்த ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது MP 25 ரக அமெரிக்க தயாரிப்பு மைக்ரோ கைத்துப்பாக்கி, 9 MM கைத்துப்பாக்கி, பென் துப்பாக்கிகள் 2, சொட்கண் துப்பாக்கி தோட்டாக்கள் 8, T56 ரக துப்பாக்கி ரவை கூடு 1 மற்றும் 170 தோட்டாக்கள், ஜெலக்னைட் குச்சிகள் 200, வயர் தொகுதி 23, அமோனியம் நைட்ரேட் உர பை 25 கிலோ 4, இராணுவ மேலங்கி 1, வாள் 1, கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டு தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்ட பாழடைந்த வீட்டின் உரிமையாளர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களைத் தேடி நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.