முன்னாள் போராளிகளை குற்றஞ்சாட்டுவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும்- க.பிரபாகரன்

இந்த நாட்டில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் அனைத்திற்கும் முன்னாள் போராளிகளை மாத்திரம் குற்றம் சாட்டுதை தயவு செய்து இந்த அரசாங்கமும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் க.பிரபாகரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்ததுடன் அவர் மேலும் தெரிவித்தாவது,

கடந்த கார்த்திகை 30ம் திகதி வவுணதீவுப் பொலிசாரின் படுகொலையுடன் தொடர்பு படுத்தி கைது செய்யப்பட்ட அஜந்தன் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஐந்தரை மாதங்களாக குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பல இன்னல்கள், உளவியல் ரீதியான தாக்கங்களை அனுபவித்த இவரும் இவரின் குடும்பமும் மிகவும் சிரமத்தின் மத்தியில் இருந்தார்கள்.

எவ்வித குற்றமும் செய்யாத சூழலில் இவர் சிறையில் அடைக்கப்பட்ட போது அவரின் மனைவி இவரை விடுதலை செய்யக் கோரி வீதியில் போராட்டங்களை மேற்கொண்டிருந்தார். அது மிகவும் துன்பகரமான சம்பவமாகவே இருந்தது. அவ்வாறு போராட்டங்களை மேற்கொண்ட போது எந்தவொரு அமைப்போ, அரசியல்வாதிகளோ ஆதரவாக இருக்கவில்லை.

தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றத்தினால் எவ்வித நிபந்தனையுமின்றி பரிபூரணமாக விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். இவர் மீது குற்றம் இல்லை என்பது உறுதிப்படுத்தபட்ட பின்னரே பலரும் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் செயலாளருக்கு கோரிக்கைள் வைத்திருந்தார்கள். சம்மமந்தன் ஐயா மற்றும் மனோகணேசன் ஆகியோர் இது தொடர்பில் நடவடிக்கை எடுத்தாகக் கேள்விப்பட்டோம்.

இவர்களிடம் நாங்கள் வினயமாகக் கோருவது யாதெனில் இவருடைய விடுதலை உறுதிப்படுத்த முன்னர் ஏன் பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேச முன்வரவில்லை. இவர் குற்றமற்றவர் என்பதை நாங்கள் எத்தனையோ வழிகளில் பலருக்கு நாங்கள் வெளிப்படையாகச் சொல்லியிருந்தோம். ஆனால் அப்போது நீங்கள் கூட எங்களை சந்தேகக் கண்ணோடு தான் பார்த்திருந்தீர்கள். ஆனால் தற்போது உங்களின் சில நோக்கங்களுக்காக அஜந்தனின் விடுதலை தொடர்பில் பேசியதாகவும் கடிதம் அனுப்பியதாகவும் கூறுவது எந்;தளவு ஏற்றக்கொள்ள முடியும் எனச் சொல்லத் தெரியவில்லை.

இருப்பினும் நாங்கள் தற்போது உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம் அஜந்தன் தற்போது ஐந்தரை மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து மிகவும் சிரமத்தின் மத்தியில் இருக்கின்றார். உங்களால் முடியுமானால் உங்களுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தில் இருந்து அவருக்கான இழப்பீட்டினைப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அஜந்தன் அவர்களில் விடுதலை உறுதி செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியுடன் கதைப்பதைப் போன்று அல்லாமல் சிறையில் இருக்கும் அரசியற் கைதிகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து ஜனாதிபதியிடம் கதைக்க வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கின்றோம்;.

யுத்தம் முடிவற்று சுமூகமான நிலை நாட்டில் ஏற்பட்டிருந்த போது பலரால் முஸ்லீம்களிடம் ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிவித்தும் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது நாட்டில் இடம்பெற்றிருக்கின்ற பாரிய சம்பவங்களை ஐஎஸ் அமைப்பு தான் செய்தது என்பதும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

எமது மக்கள் இறந்ததை நினைவு கூரும் நிகழ்வினை ஏற்பாடு செய்து முன்நின்று செயலாற்றியமையும், ஒரு முன்னாள் போராளி என்ற காரணத்தினாலும் தான் வவுணதீவுப் பொலிஸ் உத்தியோகத்தர் கொலை சம்பவத்தில் அஜந்தன் பிரதானமாகக் கைது செய்யப்பட்டார். ஆனால் தற்போது இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளின் போதுதான் பல உண்மைகள் தெரிய வந்திருக்கின்றது. எனவே இந்த நாட்டில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் அனைத்திற்கும் முன்னாள் போராளிகளை மாத்திரம் குற்றம் சாட்டுதை தயவு செய்து இந்த அரசாங்கமும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறான கொடூரமான செயற்பாடுகளை முன்னாள் போராளிகள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள் என்பதை நாங்கள் ஆணித்தரமாகக் கூறி வைக்கின்றோம் என்று தெரிவித்தார்.

இதன் பி;னர் அஜந்தன் கருத்துத் தெரிவிக்கையில் தனது விடுதலை தொடர்பில் ஒத்துழைப்பு வழங்கி அனைத்து தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தனது குடும்ப பொருளாதாரத்தைக் கொண்டு செல்வதற்கு உதவிய அனைவருக்கும் தனக்காக வாதாடிய சட்டத்தரணிகளுக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதோடு. எவ்வித குற்றமும் செய்யாமல் ஐந்தரை மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த எனக்கு எனது குடும்ப நிலைமையைக் கருத்திற் கொணடு அரசாங்மே முன்வந்து ஏதேனும் நியாயங்களை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு இல்லாவிடின் எனக்காக வாதாடிய சட்டத்தரணிகளின் ஆலோசனைக்கமைவாக எனக்கான நியாயத்தினைக் கோரி நீதி மன்றம் செல்லவும் தயராக இருக்கின்றேன். அத்துடன் எனது விடுதலைக்காக உதவிய தமிழ்த் தலைமைகள் சிறையில் வாடும் எமது அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் அதிக கரிசனை கொண்டு அவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.