மட்டக்களப்பில் புதைக்கப்பட்ட 35தமிழர்கள் -இராணுவத்தளபதியிடம் தெரிவித்துள்ளதாக கூறுகின்றார் மோகன்

காத்தான்குடியில் இருக்கின்ற பிரபல அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவினால் கடந்த காலங்களில் காணாமல் போனோரில் பலர் கொல்லப்பட்டு மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள். குறித்த சடலங்கள் எங்கு புதைக்கப்பட்டுள்ளன என்பதை அடையாளப்படுத்தவதற்கான சாட்சியங்கள் எங்களிடம் இருக்கின்றது என்பதை கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதியிடம் தெரியப்படுத்தியிருக்கின்றோம் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார்.

 இன்றைய தினம் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் காணாமல் போனோர் 35 பேர் அளவில் மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த சம்பவத்துடன் காத்தான்குடியில் இருக்கின்ற பிரபல அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவினால் இது நடைபெற்றுள்ளதாகவும், குறிப்பிடப்பட்ட சடலங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்ப்புறத்தை அண்டிய பல பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் எம்மிடம் தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக நாம் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதியைச் சந்தித்து அவரிடம் அந்தச் செய்தி தொடர்பில் தெரியப்படுத்தி இலங்கை இராணுவத் தளபதிக்கு தெரியப்படுத்தவதற்கான அறிக்கை ஒன்றினையும் வழங்கியிருக்கின்றோம்.

குறித்த சடலங்கள் எங்கு புதைக்கப்பட்டுள்ளன என்பதை அடையாளப்படுத்தவதற்கான சாட்சியங்கள் எங்களிடம் இருக்கின்றது என்பதை மிகவும் தெளிவாக அவரிடம் கூறியிருக்கின்றோம். இலங்கை இராணுவத்தின் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் இந்தத் தகவலை வழங்கியிருக்கின்றோம். சம்மந்தப்பட்ட இடங்களை அகழ்ந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும். மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக முக்கியமான காணாமல் போன பிரபலங்கள் அரசியல் காரணங்களுக்காக அன்றி பொருளாதார மற்றும் தொழில் போட்டி காரணமாகவும் காணாமல் போயிருக்கின்றனர். எனவே எங்களது சாட்சியத்தைக் கொண்டு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம்.

சாட்சியங்களின் பாதுகாப்பு காரணமாக குறிப்பிட்ட இடங்கள் சாட்சியங்களின் விபரங்கள் தொடர்பில் தற்போது ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் இவ்விடயம் மூடிமறைக்கப்படக் கூடாது என்பதற்காகவே ஊடகங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்.

தற்போது காத்தான்குடியில் ஆயுதக் குழுக்கள் இயங்கியமை தொடர்பில் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னரும் பல தடவைகள் காத்தான்குடியில் ஆயதக் குழுக்கள் இருக்கின்றன, ஆயுதங்கள் இருக்கின்ற என்பன பற்றி பலரும் தெரிவித்திருந்தார்கள். கிழக்கு ஆளுநரிடம் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி மட்டக்களப்பு சிறைச்சாலையில் கூட ஒருவர் உண்ணாவிரதம் இருந்திருந்தார் ஆனால் இவ்விடயங்கள் அந்நேரத்தில் கண்டுகொள்ளப்படவில்லை. கிழக்கு ஆளுநரின் நியமனம் பிழையானது முறையற்றது என்கின்ற வாதத்தை நாங்கள் அவர் பதவியேற்ற காலத்தில் இருந்தே கூறிக் கொண்டிருக்கின்றோம்.

தற்போது பயங்கரவாதம் வேரூன்றிய பிரதேசம் ஆளுநரின் கோட்டையாக இருக்கின்ற பிரதேசம் நூற்றுக்கு தொன்நூறு வீத வாக்குகள் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இருக்கும் அந்தப் பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதை அவர் கண்டறியத் தவறியுள்ளார் அல்லது கண்டும் காணாமல் இருந்திருக்கின்றார் என்பதே உண்மை. இன்று இடம்பெற்ற பயங்கரவாதத்திற்கான அடித்தளம் அங்கு இடப்பட்டிருக்கின்றது. இவற்றை தனது பிரதேசத்தில் இருந்து கொண்டு அவர் அறியவில்லை என்றால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. பிரதேசத்தில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் தெரிய வருகின்ற போது இந்த விடயத்தை மாத்திரம் ஆளுநரால் எவ்வாறு கண்டுகொள்ள முடியாமல் போனது.

இது சம்மந்தமான குற்றச்சாட்டுக்கள் பலராலும் முன்வைக்கப்பட்டது. அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதற்கெல்லாம் முக்கிய காரணம் அரசியற் பலம். இலங்கையில் இஸ்லாமியருக்கு ஒரு சட்டம் ஏனையவர்களுக்கு ஒரு சட்டம் என்கின்ற நிலைமை களையப்பட வேண்டும். ஒரு நாட்டுக்கு ஒரு நீதி என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட குண்டுதாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஒரு அரசியல்வாதியின் வேண்டுதலின் பிரகாரம் விடுதலை செய்யப்பட்டதாகப் பல அமைச்சர்கள் கூறியிருக்கின்றார்கள். இன்று கூட தற்கொலைதாரி இவர் தான் என அறியப்படாமல் இருந்திருந்தால் தற்போது அவர் குண்டுடன் கைது செய்யப்பட்டிருந்தாலும் விடுதலையாகியிருப்பார். அந்தளவிற்கு அரசியற் பலம் இருக்கின்றது.

நாங்கள் முன்னெடுக்கும் விடயங்கள் அரசாங்கத்திற்குப் பாதகமாக இருக்குமாக இருந்தால் தற்போதும் இந்த அவசரகாலச் சட்டம் எங்கள் மீதும் பாயும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

இஸ்லாமிய அரசியல்வாதிகளின் நடவடிக்கையும், இஸ்லாமியப் பிரதேசங்களில் நடைபெறுகின்ற அபிவிருத்திகளையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்ற போது இவர்களுக்கு ஏராளமான நிதிகள் வெளிநாடுகளில் இருந்து வருகின்றது. ஆனால் அதற்கான கணக்கு வழக்குகள் எதுவும் இல்லை. தமிழ் மக்களில் சாதாரண ஒரு பயனாளியைத் தெரிவு செய்வதாக இருந்தால் கூட எவ்வளவு சிரமத்தின் மத்தியில் தெரிவு செய்யப்படுகின்றார்கள் ஆனால் முஸ்லீம்களுக்கு எந்தத் தகவல்களும் தேவையில்லை ஒரு அமைச்சரோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரின் சிபாரிசில் வழங்கப்படுகின்றது. தமிழர்கள் என்றால் மாத்திரம் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்கப்படுகின்றது.

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்பது ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் உருவாக்கப்படுகின்றது. கிழக்கு எல்லையாகக் கருதப்படும் ஒலுவில் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகம் உள்ளது. மேற்கு எல்லையாகக் கருதப்படும் புணாணையில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கின்றார்கள். தெற்குப் பகுதியாகக் கருதும் புல்லுமலையில் தண்ணிர்த் தொழிற்சாலை அமைக்கின்றார்கள் என்கின்ற மூன்று விடயங்களையும் நாங்கள் முன்பு சுட்டிக் காட்டியிருந்தோம்.

முற்றுமுழுதாக அறாபியக் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்ற பல்கலைக்கழகத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் இது முற்றுமழுதாகத் தவறான விடயம். ஏனெனில் இங்கு அறபு மாணவர்கள் எவரும் வந்து கல்வி கற்கப் போவதில்லை. இந்த நாட்டின் தமிழ் சிங்கள முஸ்லீம் மாணவர்கள் தான் கல்வி கற்கப் போகின்றார்கள். இந்த அடிப்படையில் இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நுலையும் போது தாங்கள் ஒரு அறாபியக் கலாச்சாரத்திற்குள் நுழைவது போன்ற தோற்றப்பாடு நிச்சயமாக மாணவர்கள் மனதில் பதியப்படும் இது எதிர்கால மாணவர் சமுதாயத்திற்கு சிறந்த விடயமல்ல என்று தெரிவித்தார்.