முகத்தினை மூட மட்டக்களப்பு மாநகரத்திலும் தடை

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் முகத்தை மூடும் புர்கா ஆடைக்கு தடைவிதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் கொண்டுவந்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் 18வது அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வில் மாநகர பிரதிமுதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் க.சித்திரவேல் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் இதயபூமியாக மட்டக்களப்பு மாநகரசபை இருக்கின்றது.மட்டக்களப்பு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவையிருக்கின்றது.

இன்று புர்கா அணிகின்ற விடயம் தொடர்பில் பல உள்ளுராட்சிமன்றங்களில் தடைகொண்டுவரப்பட்டுள்ளது.

நாங்கள் மதத்தினை மதிக்கின்றோம்,மனிதர்களை மதிக்கின்றோம்.எனினும் அந்த புர்காவினை அணிந்துசென்ற ஆண் நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.அதன் காரணமாக முற்றுமுழுதாக முகத்தினை மூடும் வகையிலான ஆடையினை தடைசெய்து முகத்தினை அடையாளப்படுத்தும் வகையிலான ஆடைகளை அணியவேண்டும் என்ற பிரேரனை நிறைவேற்றப்படுமாகவிருந்தால் அது பாதுகாப்புக்கு சிறந்ததாக அமையும் என தெரிவித்தார்.