கர்பலாவில் குண்டுகள் கண்டுபிடிப்பு –செயலிழக்கச்செய்யப்பட்டதால் பதற்றம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா கிராமத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டது.

இன்று பிற்பகல் கர்பலா கிராமத்தில் உள்ள குப்பை போடும் இடத்தில் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த கைக்குண்டுகள் போடப்பட்டிருந்தன.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்று அது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கும் அறிவிக்கப்பட்டது.

இதன்போது குறித்த பகுதிக்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காத்தான்குடி பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்தபோதிலும் வேறு எந்த பொருட்களும் மீட்கப்படவில்லை.

அதனைத்தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் குண்டு செயலிழக்கச்செய்யும் பிரிவினரால் இரண்டு குண்டுகளும் செயலிழக்கச்செய்யப்பட்டது.

இதேநேரம் குறித்த குண்டு செயலிழக்கச்செய்யப்பட்டது தெரியாத நிலையில் ஆரையம்பதி,காத்தான்குடி பகுதியில் மக்கள் அச்சநிலைக்குள்ளானார்கள்.

எனினும் குறித்த குண்டுகள் செயலிழக்கச்செய்யப்பட்டதனால்தான் இந்த வெடிப்பு சத்தம் ஏற்பட்டது என்பது தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இயல்பு நிலையேற்பட்டது.