மட்டக்களப்பு சோகமயம் -வெள்ளை,கறுப்புக்கொடிகள் சோகத்தினை வெளிப்படுத்தின

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மட்டக்களப்பு நகர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் கறுப்பு,வெள்ளைக்கொடிகளும் பதாகைகளும் பறக்கவிடப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 28பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மட்டக்களப்பு நகர் உட்பட தமிழ்-முஸ்லிம் பிரதேசங்களில் கறுப்பு,வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் ஆலயங்கள் மற்றும் பொது அமைப்புகளினால் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளதுடன் இளைஞர்களினால் நகர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் துக்கதினத்தை குறிக்கும் வகையில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுவருகின்றன.

அத்துடன் முஸ்லிம் இளைஞர்களினால் வர்த்தக நிலையங்களில் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு உயிர்நீர்த்தவர்களுக்கு அனுதாபங்கள் தெரிவிக்கப்பட்டுவருவதுடன் பள்ளிவாயல்களிலும் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

இதேநேரம் மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு இளைஞர்களினால் சோக கீதம் ஒளிபரப்பப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிகள் செலுத்தப்பட்டுவருகின்றன.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு நிலைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் நகர் உட்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.