மட்டக்களப்பில் நடந்தது தற்கொலை தாக்குதல்? – தீவிர விசாரணைகள் முன்னெடுப்பு

மட்டக்கள்பு சீயோன் தேவாலயத்தில் நேற்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் ஒரு தற்கொலைக்குண்டுதாக்குதல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் தாக்குதல் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றப்புலனாய்வுத்துறையின் விசேட குழுக்கள் பல கோணங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல்தாரி தங்கியிருந்தது தொடர்பான விசாரணைகள் பல்வேறு கோணங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிசிரிவி கமரா மூலம் கொலையாளி என நம்பப்படுபவர் தொடர்பான விபரங்கள் பெறப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

கொலையாளிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் தொடர்பில் காத்தான்குடி உட்பட பல்வேறு பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பாதுகாப்பு தரப்பினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு சீயோன் தேவாயலத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை உறவினர்களிடம் வழங்கும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் உள்ள ஐந்து சட்ட வைத்திய அதிகாரிகளின் பங்களிப்புடன் சடலங்கள் பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டு சடலங்கள் வழங்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாராணி கணேசலிங்கம் தெரிவித்தார்.
இன்று காலை விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாராணி கணேசலிங்கம் நடாத்தியிருந்தார்.
எந்தவொரு வெளிநாட்டவரும் இதன்போது பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 22 சடலங்கள் கொண்டுவரப்பட்டதுடன் நான்கு பேர் சிகிச்சை பலினின்றி உயிரிழந்துள்ளதாகவும் மொத்தமாக 26பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் 17 சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களின் உடலங்கள் இன்று மாலைக்குள் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.ஒரு உடற்பாகங்கள் அடையாளம் காணமுடியாதவகையில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்த தாக்குதலின்போது 69பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் பல்வேறு பகுதிகளிலும் சிகிச்சைபெற்ற்றதாகவும் அவர் தெரிவித்தார்.