வதந்திகளை நம்பவேண்டாம்,24 துக்கதினம் -மட்டு.பல்சமய ஒன்றியம் அறிவிப்பு

மட்டக்களப்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட பல்சமயங்களின் ஒன்றியம் மக்களை வதந்திகளை நம்பாமல் உண்மையினை அறிந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிர்நீர்த்தவர்களுக்காக அன்றைய தினம் துக்க நாளாக அனுஸ்டிக்குமாறும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறும் பல்சமய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட பல்சமயங்களின் ஒன்றியத்தின் தலைவரும் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயருமாறு பொன்னையா ஜோசப் தலைமையில் சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

தனிமனிதனோ,ஒருகுழுவோ செய்யும் வன்செயல்கள் ஒரு மதத்தினையோ இனத்தையோ சார்ந்தவையில்லை எனவும் ஆயர் இதன்போது தெரிவித்தார்.

மதத்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் உணர்வுகளை தூண்டி வன்முறைக்கு இட்டுச்செல்லும் நிலையினை ஏற்படுத்துவதனால் இவ்வாறான தாக்குதலை வன்மையாக பல்சமய ஒன்றியம் கண்டிப்பதாகவும் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு சிறந்த முறையில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு சரியான முறையிலான தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்ற வேண்டுகோளும் இங்கு விடப்பட்டது.