வவுணதீவு பொலிஸார் கொலைகளையும் தேசிய தௌஹித் அமைப்பின் தலைவர் தலைமையிலான குழுவே மேற்கொண்டது?

மட்டக்களப்பு,வவுணதீவு பிரதேசத்தில் கடந்த ஆண்டு இரண்டு பொலிஸாரை தாங்களே கொலைசெய்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹித் அமைப்பின் தலைவர் சஹ்ரானின் சாரதி காஃபூர் என்ற மொஹமட் ஷரீஃப் ஆதாம் லெப்பே வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி அதிகாலை வவுணதீவு –வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள  பொலிஸ் சாவடியில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் வெட்டியும் சுட்டும் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.

அத்துடன் இது தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலிகள் தொடர்ச்சியாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுவந்ததுடன் இது தொடர்பில் ஒருவர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தற்கொலை தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தேசிய தொஹித் அமைப்பின் தலைவர் சஹ்ரானின் சாரதி காஃபூர் என்ற மொஹமட் ஷரீஃப் ஆதாம் லெப்பேயை கைதுசெய்து குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையில் வவுணதீவு பொலிஸார் படுகொலையினையும் இந்த குழுவினரே செய்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பொலிஸாரிடம் இருந்து கொண்டுசெல்லப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விபரங்களும் பெறப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.