குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எட்டாவது நாள் நினைவு தினம்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட கொழும்பு,நீர்கொழும்பு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எட்டாவது நாள் இன்றாகும்.

இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு இடங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் இன்று நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு கோட்டைமுனை மகா மாரியம்மன் ஆலயத்தின் விசேட ஆத்மசாந்தி பூஜைகள் இன்று காலை நடைபெற்றன.

ஆலய பரிபாலனசபை தலைவர் ஈஸ்வரராஜா தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி உட்பட பெருமளவான பொதுமக்கள்,ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது தீபங்கள் ஏற்றப்பட்டு விசேட பிரார்த்தனைகள் செய்யப்பட்டதுடன் ஆத்மசாந்தி அர்ச்சனைகளும் செய்யப்பட்டன.

இந்த வழிபாடுகளின்போது நாட்டில் மீண்டும் அமைதி திரும்பி நீடித்த சாந்தியும் சமாதானமும் ஏற்படவேண்டும் எனவும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.