தமிழ் கிராமங்களில் ஊர்காவல் படையினை அமையுங்கள் -மட்டக்களப்பில் கோரிக்கை

யுத்த காலத்தில் முஸ்லிம்கள் வாழும் எல்லைக்கிராமங்களுக்கு முஸ்லிம் இளைஞர்கள் ஊர்காவல் படையினராக நியமிக்கப்பட்டதுபோன்று இன்றைய சூழ்நிலையில் தமிழ் பகுதிகளை பாதுகாக்க தமிழ் இளைஞர்களைக்கொண்ட ஊர்காவல் படையினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளிலும் பாடசாலைகள் மற்றும் மதத்தலங்கள் உட்பட கிராமங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பொதுமக்களின் பங்களிப்பனை பெற்றுக்கொள்வது தொடர்பிலான விசேட கூட்டம் இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆலயங்கள் மற்றும் பாடசாலைகளி குழுக்களை அமைத்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் தமிழ் எல்லைப்பகுதிகளின் பாதுகாப்பினை பலப்படுத்தும் வகையில் ஊர்காவல் படைப்பிரிவினை அமைக்க நடவடிக்கையெடுக்குமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டன.

கடந்த யுத்த காலத்தில் முஸ்லிம் பிரதேசங்களை பாதுகாக்க ஊர்காவல் படை அமைக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டதுபோது தமிழ் பிரதேசங்களை பாதுகாக்க தமிழ் இளைஞர்களைக்கொண்டு ஊர்காவல் படை அமைக்கப்படவேண்டும் என பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இங்கு வேண்டுகோள்விடுத்தனர்.

இன்று தமிழ்-முஸ்லிம் மக்கள் வாழும் எல்லைக்கிராமங்களில் தமிழ் மக்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும் தினமும் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் இங்கு பொது அமைப்புகளினால் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் இரவு வேளையில் காத்தான்குடி பகுதியில் இருந்துவரும் சிலரினால் அச்சுறுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரிடம் பாதுகாப்பு வழங்குமாறு கோரியபோதிலும் தங்களால் பாதுகாப்பு வழங்கமுடியாது என தெரிவித்ததாகவும் இங்கு மக்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே தமது பாதுகாப்பினை கருத்தில்கொண்டு தமிழ் இளைஞர்களை ஊர்காவல் படையில் இணைத்து பாதுகாப்பினை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பிலான அறிக்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.

இனங்களிடையே விரிசல்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தவிர்த்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதேச செயலாளரினால் இங்கு அறிவுறுத்தப்பட்டது.

இதன்போது கிராம மட்டத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் பாதுகாப்பு தரப்பினருக்கு தேவையான உதவிகளை வழங்குவது குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.