சீயோன் தாக்குதல் தொடர்பில் பிழையான கருத்துகள் -தேவாலயத்தின் பிரதான போதகர் கவலை

மட்டக்களப்பு,சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் சிலர் பிழையான கருத்துகளை எழுதிவருவதாகவும் அவ்வாறானவர்கள் அதனை மாற்றிக்கொள்ளவேண்டும் எனவும் சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கையினை முன்வைத்த அவர் சிலர் தமது தேவாலயத்தினை வைத்து உதவிகளை கோரிவருவதாகவும் அவர்களு; தமது செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்தார்.

குண்டுத்தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இன்னும் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும் அவர்கள் அந்த நிலையில் இருந்து மீட்டெடுக்கவேண்டிய தேவையுள்ளதாகவும் தெரிவித்தார்.

எதற்காக எமது தேவாலயம் இலக்குவைக்கப்பட்டது என்பது தெரியாது.இருந்தபோதிலும் தாக்குதல் மேற்கொண்டவர்களை நாங்கள் மன்னிக்கின்றோம்.உங்களை நாங்கள் நேசிக்கின்றோம்.அதனை நீங்கள் மாற்றமுடியாது எனவும் போதகர் தெரிவித்தார்.