கிழக்கு மாகாண ஆளுனரின் அலுவலகத்தில் 48 ரவைகள் மீட்பு -ஆளுனர் மறுப்பு

மட்டக்களப்பு,காத்தான்குடியில் ரெலிக்கோம் வீதியில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனரின் அலுவலகத்தில் இருந்து இன்று காலை பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று காலை விசேட தேடுதல்கள் காத்தான்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் அலுவலகமும் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது அங்கிருந்து ரி56ரக துப்பாக்கி பயன்படுத்தப்படும் 48தோட்டாக்கள் படையினரால் மீட்கப்பட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனரின் பிரத்தியேக உத்தியோகத்தர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் குறித்த ரவைகள் ஆளுனரின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டவருடையதாக இருக்குமா என்பது தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண ஆளுனரின் அலுவலகத்தில் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டது தொடர்பில் பல்வேறு கருத்துகள் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமது அலுவலகத்தில் மீட்கப்பட்ட ரவைகள் தனது அலுவலகத்தில் கடமையில் இருந்து பாதுகாப்பு பிரிவினருடையது எனவும் தனக்கும் அதற்கும் தொடர்பில்லையென கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மறுத்துள்ளார்.