சீயோன் தேவாலய தாக்குதல் - தடுத்து நிறுத்திய ரமேஸ்

மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 26பேர் உயிழிந்ததுடன் 73பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தது அனைவரும் அறிந்தது.

இந்த குண்டுத்தாக்குதலின் பின்னணி தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் குறித்த தினம் குண்டுதாரி தேவாலயத்திற்கு உள் பகுதியில் நடாத்தவிருந்த தாக்குதல் ராஜீ ரமேஸ் என்னும் குறித்த தேவாயலத்தின் ஊழியரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தாக்குதல்தாரி ஆலயத்திற்குள் இரண்டு பைகளுடன் நுழைய முற்பட்டபோது தேவாலயத்தின் ஊழியரான ராஜீ ரமேஸ் அவரை சந்தேகம் கொண்டு விசாரணை செய்துள்ளதுடன் ஆலயத்திற்குள் நுழைவதையும் தடுத்துள்ளார்.

குறித்த தாக்குதல்தாரிய ஆலயத்திற்கு வெளியே கொண்டுசென்று விட்டுள்ளதுடன் மீண்டும் தாக்குதல்தாரி ஆலயத்திற்குள் நுழைய முற்பட்டபோதும் அவரை மீண்டும் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அன்றைய தினம் தாக்குதல்தாரி ஆலயத்திற்குள் குறித்த தாக்குதலை நடாத்தியிருந்தால் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உயிரிழக்கும் நிலையேற்பட்டிருக்கும்.

எனினும் ராஜீ ரமேஸின் செயற்பாடுகள் காரணமாக தாக்குதல்தாரியின் இலக்கு தடுக்கப்பட்டு தேவாலயத்தின் முன்பகுதியிலேயே தாக்குதல்தாரி தாக்குதலை நடாத்தியுள்ளார்.

இந்த தாக்குதலின்போது ராஜீ ரமேஸ் உட்பட அவரது சகோதரி,சகோதரியின் கணவர்,அவர்களின் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தாக்குதல் தாரியுடன் ராஜீ ரமேஸ் அவர்கள் போராடியமை தொடர்பில் சம்பவத்தில் படுகாயமடைந்த பலர் இன்று கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.

மட்டக்களப்பு கல்லடி,வேலூர் 07ஆம் குறுக்கில் வசித்துவந்த ராஜீ ரமேஸ் ஒரு ஒப்பந்தகாரர் என்பதுடன் சிறந்த பண்புகளைக்கொண்ட மனிதர் எனவும் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பாதுகாத்து தனது உயிரை தியாகம் செய்த ராஜீ ரமேஸின் பூதவுடன் கடந்த திங்கட்கிழமை ஓரே குழியில் தனது உறவுகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவர்களின் சடலங்கள் திங்கட்கிழமை கல்லடி வேலூரில் உள்ள உயிரிழந்தவர்களின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து அன்று மாலை மட்டக்களப்பு நாவலடியில் உள்ள பொதுமயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

கல்லடி,வேலூர் 07ஆம் குறுக்கு வீதியை சேர்ந்த ராஜீ ரமேஸ்(சீயோன் தேவாலய ஊழியர்)அவரது தங்கை சசீகலா ஜசாந்தன்(30வயது)அவரது கணவன் நாராயணன் ஜசாந்தன்(36வயது)அவர்களது மகன் ஜசாந்தன் ஜாபேஸ்(2,1ஃ2)ஆகியோரே குண்டுத்தாக்குதலில் ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.