எல்லைவீதி சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தில் உயிர்நீர்த்தவர்களுக்கு வழிபாடு

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து சகஜவாழ்வுக்கு வரவும் விசேட பிரார்த்தனையொன்று நேற்று காலை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு எல்லை வீதியில் உள்ள அருள்மிகு சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ த.சிவகுமார் குருக்கள் தலைமையில் இந்த விசேட பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இந்த பிரார்த்தனை வழிபாடுகளில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,ஆலயத்தின் தலைவர் கே.வசந்தராஜா,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் து.மதன் உட்பட மாவட்ட இந்துக்குருமார் பேரவையின் உறுப்பினர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் உயிரிழந்தவர்களுக்காக நினைவுச்சுடரும் ஏற்றி ஆத்ம அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனைத்தொடர்ந்து குண்டுத்தாக்குதல்களை கண்டிக்கும் வகையிலான ஊடக கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.