மட்டக்களப்பில் தேவாலயம் மீது தாக்குதல் -நடந்தது என்ன? –மட்டக்களப்பில் அதிகரிக்கப்படும் பாதுகாப்பு

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 14 குழந்தைகள் உட்பட 26பேர் உயிரழந்துள்ளதுடன் 69பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சென்றல் வீதியில் உள்ள சியோன் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.05மணியளவில் உதித்த ஞாயிறு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

குண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றிணை கொண்டே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் எனவும் அதனை தற்கொலை தாரியொருவர் கொண்டுவந்து தாக்கியிருக்கலாம் எனவும் பாதுகாப்பு தரப்பில் இருந்து சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 25பேர் கொல்லப்பட்ட நிலையில் தாக்குதல்தாரி என நம்பப்படும் ஒருவரின் சடலங்களும் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் 14 குழந்தைகளும் ஆறு பெண்கள் உட்பட 26பேர் உயிரிழந்துள்ளதுடன் 69பேர் படுகாயமடைந்துள்ளதுடன் இவர்களின் அதிதீவிர சிசிக்சை பிரிவில் 13பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தீவிர சிசிச்சை பிரிவில் 03பேரும் சத்திரசிகிச்சை பிரிவில் 05பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் சாதார சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்றைய தாக்குதலை தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெருமளவானோர் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலநறுவையில் இருந்தும் விசேட வைத்திய அணியினர் சிகிச்சை வழங்கும் பணிகளை முன்னெடுத்தனர்.

இதேநேரம் இந்த தாக்குதல் தொடர்பில் குறித்த தேவாலயத்தில் சம்பவத்தின்போது இருந்தவர்களின் வாக்குமூலங்களை பெறும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

ஆலயத்திற்குள் வந்த நபர் ஒருவரை சந்தேகம் கொண்ட தேவாலய ஊழியர்கள் அவரை வெளியேற்றிய நிலையிலேயே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தினை கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

உமர் தனது பெயர் என அடையாளப்படுத்திய ஒருவரே இந்த தாக்குதலை நடாத்தியதாக சம்பவத்தினை கண்டவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.எனினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை இன்று காலை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலை தொடர்ந்து மட்டக்களப்பு நகர் உட்பட பல்வேறு பகுதிகளின் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக காத்தான்குடி,ஏறாவூர்,ஓட்டமாவடி ஆகிய பகுதிகளில் படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் பள்ளிவாயல்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மட்டக்களப்பில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள் உட்பட முக்கிய பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன்; படையினர் மற்றும் பொலிஸார் விசேட ரோந்து பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றனர்.

இதேவேளை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவினை வழங்கும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

குண்டுவெடிப்பினை தொடர்ந்து முப்படையினரும் சிறந்த பங்களிப்பினை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு தினங்களுக்கு மட்டக்களப்பில் நடைபெறவிருந்த பொது நிகழ்வுகள் இடைநிறுத்துமாறும் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேநேரம் இவ்வாறான சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் இவ்வாறானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என கிழலக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று காலை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்ட கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் குண்டு வெடிப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.