பட்டிருப்பு தேசிய பாடசாலையின் நூறாவது ஆண்டு நிறைவு நடைபவனி –விழாக்கோலம் பூண்ட களுவாஞ்சிகுடி நகர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் நூறாவது ஆண்டினை பூர்த்திசெய்வதை முன்னிட்டு மாபெரும் நடைபவனி இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் க.தம்பிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக முன்னாள் அதிபர்களும்,பழைய மாணவர்களும் கலந்துகொண்டனர்.

அலங்கரிக்கப்பட்ட பாடசாலை நூற்றாண்டினை குறிக்கும் வாகன ஊர்திகளுடன் பல்வேறு வர்ண ஆடைகளை அணிந்த நிலையில் களுவாஞ்சிகுடி நகரே விழாக்கோலம் பூணும் வகையில் பவனி நடைபெற்றது.

காலை ஒன்று கூடல் நடைபெற்று தொடர்ந்து விசேட பூஜை நிகழ்வு, நூற்றாண்டு கேக் வெட்டுதல் என்பன நடைபெற்று நூற்றாண்டு நடைபவனி களுவாஞ்சிகுடி பிரதான வீதியூடாக களுதாவளை எருவில் பொதுச் சந்தை பகுதிளினூடாக சென்று மீண்டும் பாடசாலையினை வந்தடைந்தது.

பாடசாலையினை பவனி வந்தடைந்ததும் பாடசாலையில் அரங்கு நிகழ்வுகள் நடைபெற்றன.