வெளிவந்தார் காசிலிங்கேஸ்வரர் –கோவில்குளத்தில் புதைபொருள் ஆய்வில் வெளிவரும் உண்மைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கோவில்குளம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் ஆய்வுசெய்யப்படும் பகுதியை புனித பகுதியாக அறிவிப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கோவில்குளம் பகுதிக்கு இன்று பகல் விஜயம்செய்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அங்கு தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ஆய்வு பணிகளை பார்வையிட்டார்.

கோவில்குளம் பகுதியில் கி.பி.390ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் உள்ள ஆலயம் என சந்தேகிக்கப்படும் பகுதியின் பொருட்கள் இந்த அகழ்வுப்பணியின்போது தொல்பொருட்கள் திணைக்களத்தினால் கண்டறியப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் அப்பகுதியில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அனுராதபுர காலத்திற்கு முற்பட்ட கட்டிடங்களின் சிதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் பண்டைய பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் அவசர அவசரமாக கொட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே தொல்பொருட்கள் திணைக்களம் ஒரு குறுகிய பகுதிக்குள் இதனைச்செய்யாமல் விரிவுபடுத்தவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இதேநேரம் இங்கு வருகைதந்த முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொல்லியல் ஆய்வாளருமான செல்வி க.தங்கேஸ்வரியும் குறித்த பகுதியை பார்வையிட்டதுடன் அது தொடர்பிலான ஆய்வுகளையும் மேற்கொண்டார்.

மண்முனையினை தலைநகராக கொண்டு கி.பி.390ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் உலகநாச்சியார் என்பவர் ஆட்சிசெய்துவந்ததாகவும் அவரினால் சிவாலயம் ஒன்று இப்பகுதியில் கட்டுவிக்க்பபட்டதாகவும் தங்கேஸ்வரி தெரிவித்தார்.

அந்த சிவாலயம் பிரித்தானியர் ஆடசிக்காலத்தில் அழிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த பகுதி புனித பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டு அப்பகுதி முழுமையான ஆய்வுசெய்யப்படவேண்டும் எனவும் அவர் இது தொடர்பில் தெரிவித்தார்.

இநேரம் தொல்பொருட்கள் திணைக்களம் மேற்கொண்டுவரும் இந்த தொல்பொருள் ஆய்வின்போது நிலக்கீழ் புதைக்கப்பட்ட நிலையில் அனுராதபுர காலத்திற்கு முற்பட்ட கட்டிட இடிபாடுகளும் பொருட்களும் பெருமளவில் வெளிவந்தவண்ணமுள்ளன.

நீண்ட தூரத்திற்கு இந்த கட்டிட இடிபாடுகள் உள்ளதை அங்கு காணமுடிவதுடன் பண்டைய ஓடுகள்,கல்லுகளையும் காணமுடிகின்றது.
இதேவேளை இலங்கையில் ஆறு ஈச்சரங்கள் காணப்பட்டதாகவும் தற்போது ஐந்து ஈச்சரங்கள் வழிபாட்டில் உள்ள நிலையில் ஆறாவது ஈச்சரமாகவிருந்த காசிலிங்கேஸ்வரர் ஆலயம் கோவில்குளத்தில் இருந்ததாகவும் அவை பின்னர் பிரித்தானியரினால் அழிக்கப்பட்டதாகவும் வரலாற்று தகவல்கள் உள்ளதாக ஆரையம்பதி பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

பெரிய கோயிலும் அதற்கான பெரிய குளமும் இருந்ததன் காரணமாகவே கோவில்குளம் எனப்பெயர் பெற்றதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

காசி லிங்கேஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்டபோது அங்கிருந்த முக்கிய பொருட்கள் குறித்த குளத்தில் வீசப்பட்டதாக ஓரு கதை இருப்பதாகவும் குளமும் ஆய்வு செய்யப்படும்போது இன்னும் பல சான்றுகள் பெறப்படும் என அப்பகுதி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் சிலர் தமது அரசியல் காரணங்களுக்காகவும் திட்டமிட்ட குடியேற்றத்தினை செய்வதற்காகவும் குறித்த பகுதியில் தொல்பொருள் ஆய்வினை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.